ADVERTISEMENT

கோடை வெயிலில் கால்நடைகளின் தாகம் தணிக்க தண்ணீர் தொட்டி திறந்த தீயணைப்பு துறை!

09:08 AM Mar 15, 2020 | santhoshb@nakk…

கோடை வெயில் சுட்டெரிக்கத் தொடங்கிவிட்டது. கஜா புயலில் ஆடி அசைந்து வேர் அறுந்தாலும் உயிரோடு நின்ற மரங்களும் இப்போது பட்டுக் கொண்டிருக்கிறது. நட்ட பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல் விவசாயிகள் தவித்து வருகிறார்கள்.

ADVERTISEMENT

தாகம் தீர்க்க தண்ணீர் இல்லாமல் வனங்களில் வாழும் பறவைகள், விலங்குகள் கூட கிராமங்களை நோக்கி படையெடுக்கத் தொடங்கிவிட்டது. இதனால் வேட்டையாடுதல் விபத்தில் சிக்கி பலியாகுதல் என தினசரி துயரச் சம்பவங்கள் நடந்து கொண்டே இருக்கிறது.

ADVERTISEMENT

இந்த நிலையில் தான் ஆடு, மாடு போன்ற கால்நடைகளின் தாகம் தணிக்க தமிழ்நாடு தீயணைப்புத் துறை சார்பில் திருச்சி மண்டல அளவில் ஒவ்வொரு தீயணைப்பு நிலையத்தின் முன்பும் கால்நடைகளுக்கான தண்ணீர் தொட்டிகளை திறக்க மண்டல அதிகாரி உத்தரவிட நேற்று (14/03/2020) முதல் தண்ணீர் தொட்டிகளை திறந்து வைத்து தண்ணீர் ஊற்றி வருகிறார்கள் தீயணைப்பு வீரர்கள்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் 13 தீயணைப்பு நிலையங்களிலும் தண்ணீர் தொட்டிகள் திறக்கப்பட்டுள்ளது. கீரமங்கலத்தில் தண்ணீர் தொட்டி திறந்த சிறிது நேரத்தில் மேய்ச்சலில் நின்ற பால் மாடு வந்து தண்ணீர் குடிப்பதைப் பார்த்த நிலைய அலுவலர் ராசு தவிடு வாங்கி வந்து தண்ணீரில் கலந்து பசுவின் தாகத்தை தணிக்கச் செய்தார்.

ஆலங்குடியில் சற்று பெரிய தொட்டியாக வைத்து தண்ணீரை நிரப்பிய சிறிது நேரத்தில் பல ஆடுகள் வந்து தாகம் தீர்த்துக் கொண்டது. தண்ணீர் குறைய குறைய உடனுக்குடன் தண்ணீர் நிரப்பி வைக்கப்படுவதாக தீயணைப்பு வீரர்கள் கூறுகின்றனர்.


இதே போல தமிழ்நாடு முழுவதும் கால்நடைகள், பறவைகள், விலங்குகளுக்கான தண்ணீர் தொட்டிகள் திறந்து தண்ணீர் ஊற்றினால் விபத்திலும், வேட்டையிலும் சிக்கி உயிர் பலியாகாமல் காப்பாற்றப்படலாம் என்கிறார்கள் சமூக அக்கறை கொண்ட இளைஞர்கள்.

கொத்தமங்கலத்தில் பனைமரக்காதலர்கள் கடைவீதியில் பந்தல் அமைத்து தண்ணீர்பந்தல் அமைத்ததுடன் நின்றுவிடாமல் பறவைகளுக்கான தண்ணீர் தொட்டி அமைத்து தண்ணீர் ஊற்றி வருகின்றனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT