Skip to main content

கோடை மழை: முறிந்து விழுந்த வாழை மரங்கள்; விவசாயிகள் வேதனை

Published on 11/05/2023 | Edited on 11/05/2023

 

summer rain affected banana tree erode district farmer issue

 

ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக சத்தியமங்கலம், தாளவாடி, பவானி, கோபிசெட்டிபாளையம் பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இதே போல் மாவட்டத்தின் முக்கிய அணைகளான பவானிசாகர், வரட்டுப்பள்ளம், குண்டேரி பள்ளம், கொடிவேரி அணை போன்ற பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால் அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. தாளவாடி மலைப் பகுதியில் கடந்த 6 நாட்களாக இரவில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்து வருவதால் வனப்பகுதியில் குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது.

 

இந்நிலையில் நேற்று இரவு மாவட்டத்தின் புறநகர் பகுதியில் பரவலாக மழை பெய்துள்ளது. குறிப்பாக கோபி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் இரவு 11 மணிக்கு மேல் சூறாவளிக் காற்றுடன் பலத்த மழை பெய்தது. கோபி அருகே உள்ள குகனூரில் நேற்று இரவு 10 மணிக்கு பிறகு சூறாவளிக் காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்தது. பலமாக வீசிய சூறாவளிக் காற்றால்  மரங்கள் முறிந்து விழுந்தன. குகனூர் குளம் அருகே 4வது வார்டில் உள்ள மின்கம்பம் முறிந்து கீழே விழுந்தது. இதனால் நேற்று இரவு அந்த பகுதியில் மின்தடை ஏற்பட்டது. அப்பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நிலையில் விடிய விடிய மின் வினியோகம் இல்லாததால் அப்பகுதி மக்கள் கடும் அவதி அடைந்தனர்.

 

இதேபோல் நம்பியூரிலும் இரவு நேரத்தில் சூறாவளியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. அந்தியூரில் கடந்த இரண்டு நாட்களாக இடியுடன் கூடிய கனமழை, சூறாவளிக் காற்றுடன் மழை பெய்தது. குறிப்பாக அத்தாணி, சின்னத்தம்பி பாளையம்,  நகலூர், எண்ணமங்கலம், கோவிலூர், செல்லம்பூர், அம்மன் கோவில், விராலி காட்டூர் ஆகிய பகுதிகளில் சூறாவளிக் காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதில் விவசாயிகள் பயிரிட்டு இருந்த கதலி, செவ்வாழை,  பூவன் உள்ளிட்ட வாழை மரங்கள் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டவை முற்றிலும் முறிந்து விழுந்தன. இதனால் 10 லட்ச ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர். எனவே அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த மழை அளவு மி. மீட்டரில் வருமாறு:- நம்பியூர் - 15, கோபி - 10. 20, சென்னிமலை - 10, எலந்த குட்டைமேடு - 7.80, சத்தியமங்கலம் - 7 மில்லி மீட்டர் ஆகும். 

 

 

சார்ந்த செய்திகள்