
கோடை காலம் நெருங்கி வருவதால் தர்பூசணி பழங்களின் விற்பனை தொடங்கி வருகிறது. கோடைகாலம் என்றாலே பல இடங்களில் தற்காலிக தர்பூசணி கடைகள் முளைக்கும். இந்நிலையில் செயற்கையாக ஊசி செலுத்தி பழுக்க வைக்கப்படும் பழங்கள் குறித்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் தென்காசியில் மருந்து மூலம் பழுக்க வைக்கப்பட்ட தடுப்பூசணிகளை உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில்-ராஜபாளையம் சாலையில் பல இடங்களில் விற்கப்படும் தர்பூசணி பழங்கள் ஊசியால் மருந்து செலுத்தப்பட்டு பழுக்க வைக்கப்பட்டவை என புகார்கள் எழுந்தது. உடனடியாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி முகமது ஹக்கீம் தலைமையிலான அதிகாரிகள் அங்கு ஆய்வில் ஈடுபட்டனர். அப்போது மாரியப்பன் என்ற மாற்றுத்திறனாளி ஒருவர் விற்று வந்த தர்பூசணி பழங்களை சோதனை செய்தனர்.
ஆய்வில் விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்த அனைத்து தர்பூசணி பழங்களும் ஊசி மூலம் பழுக்க வைக்கப்பட்டது என்பது தெரியவந்தது. உடனடியாக பழங்கள் அனைத்தையும் பினாயில் ஊற்றி அழித்ததோடு, அனைத்தையும் மாநகராட்சி வண்டியில் ஏற்றி அப்புறப்படுத்தினர். சம்பந்தப்பட்ட கடை உரிமையாளருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதோடு அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
இதுபோன்று ஊசிகள் மூலம் மருந்து செலுத்தி பழுக்க வைக்கப்படும் தர்பூசணி பழங்களை வாங்கி உண்பதும் உயிருக்கு ஆபத்தானவை என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.