40 ஆண்டுகளுக்கு ஒருமுறை காட்சி தரும் அத்திவரதர் தற்போது குளத்தில் இருந்து வெளியே எடுக்கப்பட்டு முதலில் சயன கோலத்திலும், தற்போது நின்ற கோலத்திலும் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். 40 நாட்கள் மட்டுமே அத்தி வரதரை காண முடியும் என்பதால் லட்சக்கணக்கான பக்தர்கள் அத்தி வரதரை காண காஞ்சிபுரத்திற்கு குவிந்து வருகின்றனர்.

Advertisment

suki sivam

இந்நிலையில் ஆன்மீக பேச்சாளர் சுகிசிவம் சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற ஒரு விழாவில் பேசும்போது, அவரது பாணியில் அத்தி வரதர் தொடர்பாக சில கருத்துக்களை தெரிவித்தார். அதில், " அத்திவரதரை தரிசிக்க பலர் கூட்ட நெரிசலில் சிக்கி தவிக்கின்றனர். அப்படி ஏன் கடவுளை காண வேண்டும்? உங்களை கஷ்டப்படுத்த நினைப்பாரா கடவுள்? நீங்கள் ஏன் உங்கள் வீட்டில் இருக்கும் கடவுளை காண வேண்டும்? இவ்வளவு இடிபாடுகளுடன் சென்று பல துன்பங்களை அனுபவித்து கடவுளை காணாவிட்டால்தான் என்ன" என்று பேசியிருந்தார்.

இவரின் இந்த கருத்துக்கு பல தரப்பில் இருந்து எதிர்ப்புகள் கிளப்பியது. சுகிசிவம் தனது கருத்துக்களை திருப்ப பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். இதற்கு விளக்கமளித்து வீடியோ ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளார். அதில் அவர் அத்தி வரதர் மீதோ இந்து மதத்தின் மீதோ எதிர் கருத்துக்களை வீச வேண்டும் என்பது என் நோக்கமல்ல. மக்கள் படும் கஷ்டங்களை பார்த்த பின்பு இந்த கருத்தை தெரிவித்தேன். என்னை பொறுத்தவரை கடவுளை வெளியில் தேடுவதை விட நமக்குள் தேட வேண்டும்" என்று அவர் தெரிவித்துள்ளார்.