/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/sudarshan rohit.jpg)
பழனி அருகே உள்ள சாமிநாதபுரத்தில் இரண்டு சிறுவர்கள் குட்டையில் மூழ்கி இறந்த துக்கத்தால் தாயும் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி அருகே உள்ள சாமிநாதபுரத்தைச் சேர்ந்த கோதண்டராமன். இவருடைய மனைவி வனிதாமணி. இவர்களுக்கு ஒன்பது வயதான சுதர்சன், ஏழு வயதான ரோஹித் என இரண்டு மகன்கள். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உடுமலைப்பேட்டை தனியார் பள்ளியில் சுதர்சன் மூன்றாம் வகுப்பும், ரோஹித் இரண்டாம் வகுப்பும் படித்து வந்தனர்.
இந்த நிலையில் விடுமுறைக்காக உடுமலை தாந்தோணியில் வசிக்கும் தாத்தா ரங்கசாமியின் வீட்டிற்கு தாய், தந்தையுடன் அண்ணனும், தம்பியும் சென்றனர். அப்பொழுது ரங்கசாமி தாந்தோணி அருகே உள்ள சேரன் நகரில் குத்தகைக்கு எடுத்த நிலத்தில் பாசனத்திற்கு தேவையான தண்ணீரை சேமித்து வைப்பதற்காக நிலத்தில் குழி தோண்டி அதில் கெட்டியான தார்ப்பாயிலை விரித்து பண்ணைக்குட்டை அமைத்திருந்தார். இந்த நிலையில்தான் நேற்று முன்தினம் தாத்தாவுடன் அந்த தோட்டத்திற்குள் மாணவர்களான சுதர்சனும், ரோஹித்தும் சென்றனர். அவர்களை ரங்கசாமி தோட்டத்தில் விளையாட விட்டுவிட்டு மற்ற விவசாய பணிகளை பார்த்துக் கொண்டிருந்தார்.
அப்பொழுது பண்ணைக்குட்டை அருகே விளையாடிக் கொண்டிருந்த சுதர்சனும், ரோஹித்தும் எதிர்பாராத விதமாக அந்த பண்ணைக் குட்டையில் தவறி விழுந்தனர். அப்பொழுது அங்கு யாரும் இல்லாததால் சிறிது நேரத்திலேயே இருவரும் அந்த பண்ணைக் குட்டை தண்ணீரிலேயே மூழ்கி பரிதாபமாக பலியானார்கள். இதுகுறித்து உடுமலை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் இறந்த சிறுவர்களின் உடல்களை சொந்த ஊரான சாமிநாதபுரத்திற்கு கொண்டு வந்து அப்பகுதியில் உள்ள மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
ஒரே நேரத்தில் இரண்டு மகன்களையும் பறிகொடுத்த துக்கத்தில் இருந்த வனிதாமணி இரவு முழுவதும் அழுது புலம்பிக் கொண்டிருந்தார். அவரை அக்கம், பக்கத்தினரும் உறவினர்களும் ஆறுதல் கூறினார்கள். ஆனாலும் தனது மகன்களின் புகைப்படத்தை கையில் வைத்தபடியே தொடர்ந்து இரவு முழுவதும் அழுது கொண்டிருந்த வனிதாமணி, அதிகாலையில் வீட்டில் இருந்தவர்கள் தூங்கி கொண்டிருந்த வேலையில் திடீரென வீட்டில் இருந்த மண்ணெண்ணையை வீட்டின் பின்புறம் சென்றவர் தனது உடம்பில் ஊற்றி தீக்குளித்துக் கொண்டார்.
வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த உறவினகர்கள் அதிகாலையில் எழுந்து வனிதாமணியை தேடிய போதுதான் வீட்டின் பின்புறம் தீக்காயங்களுடன் எரிந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே பதறி அடித்துக் கொண்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் உடுமலை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் வனிதாமணியை பரிசோதனை செய்த டாக்டர்கள் வனிதாமணி ஏற்கனவே இறந்துவிட்டார் என்று கூறியதை கண்டு அதிர்ச்சி அடைந்துவிட்டனர்.
இதுபற்றி அப்பகுதி மக்களிடம் கேட்டபோது, கோதண்டராமனுக்கும், வனிதாவுக்கும் கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது இருவரும் அக்கம் பக்கத்தினருடன் அன்பாக பழகுவார்கள். அவர்கள் பிறந்த இரண்டு மகன்களையும் மிகவும் பாசத்துடன் வளர்த்து வந்தனர். உறவினர் வீட்டில் விசேச நிகழ்ச்சியாகட்டும், நண்பர்கள் இல்ல விழாவாகட்டும் அனைத்து இடங்களுக்கும் தங்கள் குழந்தைகளுடன் தான் செல்வார்கள். இருவரும் தங்கள் பிள்ளைகள் மீது அளவில்லா பாசத்துடன் தான் இருந்தனர். இதனால் தான் அந்த குழந்தைகள் இறந்த பிரிவை தாங்கிக் கொள்ள முடியவில்லை. வனிதா தற்கொலை செய்து கொண்ட போது கோதண்டராமன் வீட்டில் இல்லை. இரவு முழுவதும் தனது மகன்கள் புதைகப்பட்ட இடத்திலேயே இருந்துள்ளார். தற்போது மனைவியும் இறந்துவிட்டதை கண்டு கோதண்டராமன் பெரும் அதிர்ச்சியில் உள்ளார் என்றனர். தனது உயிருக்கு உயிராக வளர்த்த தனது இரண்டு மகன்களை பறிகொடுத்துவிட்டு தாயும் தற்கொலை செய்து கொண்டதை கண்டு அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது!
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)