
தி.மு.க. அமைச்சர்களின் வழக்குகளைத் தாமாக முன்வந்து விசாரிப்பதால் என்னை வில்லனாகப் பார்ப்பதாகச் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்திருக்கிறார்.
அமைச்சர்கள் பொன்முடி, தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர், முன்னாள் அமைச்சர் ஓ.பி.எஸ். ஆகியோர் மீது தாமாக முன்வந்து (சூமோட்டோ) வழக்குகளை விசாரணைக்கு எடுத்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தற்போது அமைச்சர் ஐ. பெரியசாமி, அதிமுக முன்னாள் அமைச்சர் வளர்மதி மீதான வழக்குகளையும் விசாரணைக்கு எடுத்திருக்கிறார்.
தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய அமைச்சராக 2008ல் பதவி வகித்த ஐ. பெரியசாமி, தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி, வீட்டு வசதி வாரியத்துக்குச் சொந்தமான இடத்தை, மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞரின் பாதுகாவலராக இருந்த கணேசன் என்பவருக்கு ஒதுக்கியதில் முறைகேடு நடந்ததாகப் புகார் கூறப்பட்டது. இதனையடுத்து 2012ல் அதிமுக ஆட்சியின்போது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி சிறப்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார் ஐ. பெரியசாமி. இதனை விசாரித்த நீதிபதி, பெரியசாமியை வழக்கிலிருந்து விடுவித்து உத்தரவிட்டார். இந்த வழக்கை செப். 7ம் தேதி தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தார் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்.
அதேபோல், 2001-2006 வரையிலான அதிமுக ஆட்சிக் காலத்தில் சமூக நலத்துறை அமைச்சராக இருந்த வளர்மதி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராகச் சொத்துக் குவிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கிலிருந்து வளர்மதி உள்ளிட்டோரை விடுவித்து ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் 2012-ல் உத்தரவிட்டது. இந்த உத்தரவையும் மறு ஆய்வு செய்யும் வகையில், தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்திருக்கிறார் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்.
இந்த இரு வழக்குகளும் இன்று (செப். 8) சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், “கீழமை நீதிமன்றங்களின் செயல்களைப் பார்க்கும்போது நீதித்துறையை ஆண்டவன்தான் காப்பாற்ற வேண்டும். வழக்குகளை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்வதால் என்னை வில்லனாகப் பார்க்கின்றனர். ஒவ்வொரு வழக்கிலும், விசாரணையை யாரும் எதிர்கொள்ள விரும்பவில்லை'' என ஆதங்கப்பட்ட நீதிபதி, இந்த வழக்கில் தொடர்புடைய அமைச்சர் பெரியசாமி, வளர்மதி, லஞ்ச ஒழிப்புத்துறை உள்ளிட்டோர் பதிலளிக்க உத்தரவிட்டார்.