அண்மையாகவே பள்ளி மாணவர்கள் பேருந்துகளில் அபாயகரமாகத்தொங்கிக்கொண்டு பயணிக்கும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகும் நிலையில், திருவள்ளூரில் பேருந்து ஒன்றின் படிக்கட்டில் பள்ளி மாணவர்கள் தொங்கியதால் படிக்கட்டு திடீரென பிடுங்கிக் கொண்டு விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
திருவள்ளூர் மாவட்டம் ஆவடியிலிருந்து புதிய கன்னியம்மன் நகர் வரை 61Kஎன்றமாநகரப் பேருந்து இயக்கப்பட்டுவருகிறது. பேருந்தை ஓட்டுநர் சுந்தரமூர்த்தி இயக்க, நடத்துநராக சீனிவாசன் இருந்தார். வழக்கம்போல் பேருந்து கன்னியம்மன் நகர் பகுதியில் இருந்து ஆவடி நோக்கி சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தது. அப்போது கூட்ட நெரிசலில் சில பள்ளி மாணவர்கள் படியில் தொங்கியபடி பயணம் செய்தனர். அப்போது திடீரென பாரம் தாங்காமல் பேருந்தின் பின்பக்க வாயிலில் ஒரு படிக்கட்டு உடைந்து கீழே விழுந்தது. இதில் படிக்கட்டில் பயணித்த இரண்டு பள்ளி மாணவர்கள், ஒரு இளைஞர் என மூன்று பேர் காயமடைந்தனர். உடனடியாக பேருந்து நிறுத்தப்பட்டது. இந்த சம்பவம் குறித்து ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.