Sudden road blockade by voters! Officials reply that the request is being fulfilled!

Advertisment

தமிழ்நாட்டில் விடுபட்ட காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தென்காசி, நெல்லை உள்ளிட்ட ஒன்பது மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நேற்று (06.10.2021) காலை தொடங்கிய நிலையில், பிற்பகல் வரை வாக்குப்பதிவு மந்தமாக நடைபெற்றது. பிற்பகலுக்குப் பிறகு வாக்குப்பதிவு சீராக அதிகரித்தது. அதேபோல், பல்வேறு இடங்களில் மாலை 5 மணிக்குப் பிறகு வாக்குப்பதிவு வேகமெடுத்ததால், அதிகளவிலானோர் வாக்களிக்க வந்தனர். இதனால், பல்வேறு இடங்களில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அதனால் அதிகாரிகள், இறுதியில் வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க வைத்தனர்.

இந்நிலையில், விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி ஒன்றியத்தில் உள்ள துறவி கிராமத்தில் அரசு நடுநிலைப்பள்ளியில் வாக்குப்பதிவு நடைபெற்றது. மதியம் 3 மணியளவில் அப்பகுதி மக்கள் 500க்கும் மேற்பட்டோர் திரளாக வாக்களிக்க வந்தனர். இதனால் நெரிசலும், காலதாமதமும் ஏற்பட்டது. இதனால் காத்திருந்த வாக்காளர்கள், தங்களுக்கு கூடுதல் வாக்குச் சாவடி வேண்டும் என திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து தேர்தல் நடத்தும் பாதுகாப்பு அதிகாரிகள் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, கூடுதலாக ஒரு பூத் தயார் செய்து கொடுப்பதாக கூறினர். அதனை ஏற்ற அவர்கள் சாலை மறியலைக் கைவிட்டனர்.