Skip to main content

புகை மண்டலமாக மாறிய பேருந்து நிலையம்; அச்சமடைந்த மக்கள்

Published on 11/01/2024 | Edited on 11/01/2024
sudden fire broke out in the old municipal building in Thuraiyur
கோப்புப்படம்

திருச்சி மாவட்டம் துறையூர் பேருந்து நிலையம் அருகே பழைய நகராட்சி கட்டடம் உள்ளது. இந்த கட்டடத்தின் வடபுறத்தில் உள்ள அறையில் தூய்மைப் பணிகளுக்கான தளவாடப் பொருட்கள் வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் இரவு 9 மணியளவில் திடீரென தளவாடப் பொருட்கள் இருந்த அறையிலிருந்து புகை வெளிவரத் தொடங்கியது. அருகில் இருந்தவர்கள் பழைய நகராட்சி வளாகத்தில் கொசு மருந்து அடித்திருக்கலாம் எனக் கருதியபடி இருந்தனர். ஆனால் நேரம் செல்ல செல்ல ஒரே புகை மண்டலமாகக் காட்சியளித்தது.

அங்கு சென்று பார்த்தபொழுது அறையில் வைக்கப்பட்டிருந்த பொருட்கள் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் துறையூர் தீயணைப்புத் துறையினருக்கு உடனடியாக தகவல் அளித்தனர். விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்க போராடினர். அதற்குள் தூய்மைப் பணிகளுக்கான தளவாடப் பொருட்கள், தூய்மைப் பணியாளர்கள் பயன்படுத்தும் கையுறைகள், முகக் கவசங்கள், ப்ளீச்சிங் பவுடர், மூட்டைகள் என எல்லாவற்றிலும் தீ மளமளவெனப் பரவியது.

மின்கசிவு காரணமாகத் தீ விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. தீயணைப்புத் துறையினர் சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். பழைய நகராட்சி கட்டடத்தில் நடந்த திடீர் தீ விபத்தில், பேருந்து நிலையம் முழுவதும் புகை பரவிப் புகை மண்டலமாகக் காட்சியளித்தது. உடனடியாக மின்சாரம் நிறுத்தப்பட்டு தீயணைக்கும் பணி நடைபெற்றது.

சார்ந்த செய்திகள்

Next Story

மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை; நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Father sentenced to life imprisonment for misbehaving with daughter

திருச்சி மாவட்டம் துறையூர் வட்டம் பகுதியைச் சேர்ந்தவர் 64 வயதான விவசாயி. இவருக்கு 35 வயதில் மாற்றுத்திறனாளி (மன நலம் பாதிக்கப்பட்ட ) ஒரு மகள் இருந்தார். கை, கால்களும் செயல் இழந்த அந்த பெண் தனது தாயாரின் பராமரிப்பில் இருந்து வந்த நிலையில் அவரது தாயார் இறந்து விட்டார்.

இதனையடுத்து தனது தந்தை மற்றும் பாட்டியின் பராமரிப்பில் இருந்து வந்தார். இந்நிலையில் கடந்த 2021 ஆவது ஆண்டில் பெண்ணின் உடல் நிலையில் மாற்றம் ஏற்பட்டதையடுத்து, மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர். இதில் மாற்றுத்திறனாளியான அந்த பெண் கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது. இது குறித்து அவரது உறவினர்கள் முசிறி மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.

இதைத்தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், தந்தையான விவசாயியே அவரது மகளை 2020 ஆம் ஆண்டு டிசம்பர் 19 ஆம் தேதி பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கிய விவரம் தெரியவந்தது. இதனையடுத்து அவரை போலீஸார் கைது செய்தனர். அடுத்த சில மாதங்களில், பெண்ணுக்கு குறை பிரசவத்தில் குழந்தை இறந்து பிறந்தது. மேலும் 5 மாதங்கள் கழித்து உடல் நலம் மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் அந்த பெண்ணும் உயிரிழந்தார்.

இதுதொடர்பான வழக்கு திருச்சி மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டு நடந்து வந்தது. வழக்கில் வியாழக்கிழமை தீர்ப்பளிக்கப்பட்டது. இதில், குற்றம் நிரூபிக்கப்பட்டதையடுத்து விவசாயிக்கு வாழ்நாள் சிறை தண்டனையும், ரூ. 10,000 அபராதமும் விதித்து நீதிபதி ஸ்ரீவத்சன் தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசுத்தரப்பு சிறப்பு வழக்குரைஞராக ஜாகிர் உசேன் ஆஜரானார்.

Next Story

 ஹோட்டலில் பயங்கர தீ விபத்து; 6 பேர் பலியான சோகம்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Incident happened 6 people for Terrible fire at hotel in patna

பீகார் மாநிலம், பாட்னா சந்திப்பு ரயில் நிலையம் அருகே தனியார் அடுக்குமாடி ஹோட்டல் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த ஹோட்டலில் இன்று (25-04-24) காலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. அப்போது அங்கிருந்த சிலர் சிக்கினர். இதனையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு துறையினர், பல மணி நேர போராட்டத்திற்கு பின்பு அங்கு ஏற்பட்டிருந்த தீயை அணைத்து, கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்தப் பயங்கர தீ விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும், அங்கு படுகாயமடைந்திருந்த 20க்கும் மேற்பட்டவர்களை சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் உடனடியாக அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து, இந்தத் தீ விபத்து சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.