Skip to main content

பேருந்து ஓட்டையில் பெண் விழுந்த சம்பவம்; சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு

Published on 07/02/2024 | Edited on 07/02/2024
A sudden hole in the bus; Appeal to Madras High Court

சென்னையில் அரசுப் பேருந்தின் பின்புறத்தில் திடீரென ஏற்பட்ட துவாரத்தால் பெண் பயணி ஒருவர் கீழே விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில், நீதிமன்றத்தில் இது தொடர்பாக முறையிடப்பட்டுள்ளது.

நேற்று சென்னை திருவேற்காட்டில் இருந்து வள்ளலார் நகர் நோக்கிச் சென்ற மாநகரப் பேருந்தில் பெண் பயணி ஒருவர் பின்பக்க இருக்கையில் அமர்ந்திருந்தார். அப்பொழுது திடீரென இருக்கையின் கீழே இருந்த பலகை உடைந்து ஒரு பெரிய ஓட்டை உருவானது. அதன் வழியே பெண் பயணி கீழே விழுந்தார்.

முழுதாக கீழே விழாமல் பேருந்தில் பெண் சிக்கிக்கொண்டார். பெண் பயணி விழுந்தது தெரியாமல் பேருந்து சிறிது தூரம் சென்றது. பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு பேருந்து உடனடியாக நிறுத்தப்பட்டது. இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அப்பெண்ணை உடனடியாக மீட்டு அவருக்கு குடிக்க தண்ணீர் கொடுத்து ஆசுவாசப்படுத்தினர்.

பேருந்தில் ஏற்பட்ட இந்த உடைப்புக்கு பணிமனை பணியாளர்களின் அலட்சியமே காரணம் எனக் குற்றச்சாட்டு எழுந்தது. பேருந்தின் பின்புற இருக்கையில் கீழே உள்ள பலகை சேதமடைந்து இருப்பதைக் கண்டுகொள்ளாமல் விட்டுள்ளனர். இது குறித்து பேசின் பிரிட்ஜ் பணிமனை கிளை மேலாளர் மற்றும் தொழில்நுட்ப பொறியாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் உத்தரவு பிறப்பித்துள்ளார். காயமடைந்த பெண்ணுக்கு சிகிச்சை வழங்கப்பட்டு தற்பொழுது வீடு திரும்பி இருப்பதாகவும் சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

A sudden hole in the bus; Appeal to Madras High Court

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாகச் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. செய்தித் தாள்களில் வெளியான செய்திகள் அடிப்படையில் வழக்கறிஞர் ஆர்.ஒய். ஜார்ஜ் வில்லியம் என்பவர் நீதிமன்றத்தில் முறையீடு செய்திருந்தார். பேருந்துகளில் பல கவனக் குறைபாடுகள் இருக்கிறது. பேருந்துகளின் தரம் குறித்து நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் எனத் தெரிவித்திருந்தார். இந்த முறையீட்டை கேட்ட நீதிபதிகள், இந்த சம்பவம் தொடர்பாக நாங்கள் பார்த்துக் கொள்வதாக (We Will See That) தலைமை நீதிபதி கங்கா பூர்வாலா, நீதிபதி பரத் சக்கரவர்த்தி ஆகியோர் அமர்வு பதிலளித்துள்ளது.

சார்ந்த செய்திகள்

Next Story

'விசாரணையை சந்தியுங்க'-மீண்டும் மீண்டும் கொட்டுப்பட்ட ஹெச்.ராஜா!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
' inquiry'-repeatedly dumped by H.Raja

தன் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனப் பாஜக நிர்வாகி ஹெச்.ராஜா தொடர்ந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

தமிழக பாஜக நிர்வாகியான ஹெச்.ராஜா கடந்த 2018 ஆம் ஆண்டு பெண்கள் குறித்து டிவிட்டர் வலைத்தளத்தில் சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றைப் பதிவிட்டு இருந்தார். இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் அந்தியூர் செல்வராஜ்  உட்பட திமுகவின் முக்கிய நிர்வாகிகள் ஈரோடு மாவட்ட காவல்துறையில் ஹெச்.ராஜா மீது புகார் அளித்திருந்தனர். இது தொடர்பாக  ஈரோடு டவுன் காவல் நிலைய போலீசார் பெண்களுக்கு எதிராக ஆபாசமாக பேசுதல்; பொது அமைதியைச் சீர்குலைக்கும் வகையில் செயல்படுதல்; கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கில் செயல்படுதல் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் ஹெச்;ராஜா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு ஈரோடு மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. தொடர்ந்து இந்த வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி ஹெச்.ராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் வழக்கை மூன்று மாதத்திற்குள் முடிக்க சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் சிறப்பு நீதிமன்றத்தில் தன் மீது விசாரணையில் வழக்கை ரத்து செய்யக்கோரி மீண்டும் சென்னை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு இன்று நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது 'அந்தச் சர்ச்சைக்குரிய பதிவை பதிவிட்டது நீங்களா?' என ஹெச்.ராஜா தரப்புக்கு கேள்வி எழுப்பினார். அதற்கு ஹெச்.ராஜா தரப்பு வழக்கறிஞர் ஆம் எனப் பதிலளித்தார். தொடர்ந்து ஹெச்.ராஜா மீதான இந்த வழக்கை ரத்து செய்ய முடியாது என உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை சந்திக்க வேண்டும் என உத்தரவிட்டு ஹெச்.ராஜா தரப்பு மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Next Story

சிகிச்சையின் போது இளைஞர் பலி; சுகாதாரத்துறை விசாரணை!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
Youth sacrifice during treatment Health investigation

புதுச்சேரி மாநிலம், முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் செல்வநாதன். மார்க்கெட் கமிட்டி ஊழியராக பணிபுரிந்து வரும் செல்வநாதனுக்கு ஹேமச்சந்திரன், ஹேமராஜன் என இரண்டு மகன்கள் இருந்தனர். 26 வயதான ஹேமச்சந்திரன், தனியார் நிறுவனத்தில் டிசைனராக பணிபுரிந்து வந்தார். இத்தகைய சூழலில் உடல் பருமனாக இருந்த ஹேமச்சந்திரன், சுமார் 150 கிலோவுக்கு மேல் இருந்துள்ளார். இதனால், மன உளைச்சலில் இருந்த ஹேமச்சந்திரன் உடல் எடையை குறைக்க சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவ ஆலோசனை பெற்று வந்தார். அங்கு அவரது உடல் பருமனை குறைப்பதற்காக, அறுவை சிகிச்சை மூலம் கொழுப்பு நீக்க சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, ஹேமச்சந்திரன் கடந்த 22 ஆம் தேதி (22.04.2024) மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை தொடங்கிய 15 நிமிடங்களிலேயே, மாரடைப்பு ஏற்பட்டு கடந்த 24 ஆம் தேதி (24.04.2024) ஹேமச்சந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, ஹேமச்சந்திரன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர்கள் புதுச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் பேரில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடல் பருமனைக் குறைக்க சிகிச்சை மேற்கொண்ட 26 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி இருந்தது.

இதனையடுத்து உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் மரணமடைந்தது குறித்து குழு அமைத்து விசாரணை செய்யப்படும் என உயிரிழந்த இளைஞரின் பெற்றோரிடம் தொலைபேசியில் பேசிய தமிழக மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் உறுதியளித்திருந்தார். அப்போது மகனை இழந்த பெற்றோருக்கு தனது ஆறுதலையும் அமைச்சர் மா. சுப்ரமணியன் தெரிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து இது தொடர்பாக விசாரணை நடத்த 2 இணை இயக்குநர்கள் கொண்ட குழுவை அமைத்து தமிழக மருத்துவத்துறை உத்தரவிட்டிருந்தது. இந்த குழு 2 நாட்களில் விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்கவும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஹேமச்சந்திரன் உயிரிழந்தது தொடர்பாக சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். மேலும் செங்கல்பட்டு மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர் மருத்துவர் தீர்த்தலிங்கம் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.