Skip to main content

'சவர்மா' சாப்பிட்ட 17 பேருக்கு திடீர் உடல்நலக் கோளாறு!

Published on 28/01/2021 | Edited on 28/01/2021

 

 Sudden health problems for 17 people who ate Savarma!

 

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பெரிய கடைவீதியில் உள்ள ஒரு துரித உணவுக் கடையில் 'சவர்மா' (ரொட்டிக்குள் சிக்கன் வைத்த உணவு) என்ற உணவுப் பொருளை வாங்கி சாப்பிட்ட 17 பேருக்கு வாந்தி, பேதி ஏற்பட்டு தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

மணமேல்குடி பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒரு நண்பரின் திருமணத்தில் கலந்துகொண்ட இளைஞர்கள், சிறப்பு விருந்தாக அறந்தாங்கியில் உள்ள ஒரு புதிய துரித உணவுக் கடையில் இருந்து சவர்மா என்ற உணவை 8 பார்சல்கள் வாங்கிச் சென்று 12 பேர் சாப்பிட்டுள்ளனர். மறுநாள் திங்கள்கிழமை மதியம் ஜாகிர்உசேன், அசாருதீன், ரவுசுதீன், சல்மான் பாரிஸ், வசுபுதீன், மைதீன் உள்பட 12 பேருக்கும் வாந்தி, பேதி, மயக்கம் ஏற்பட்டு மணமேல்குடியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். சிலர் சிகிச்சை முடிந்து வீட்டுக்குத் திரும்பினாலும், மறுபடியும் வாந்தி ஏற்பட்டு மீண்டும் சிகிச்சைக்கு வந்துள்ளனர். தற்போது 3 பெண்கள் உட்பட 4 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

 Sudden health problems for 17 people who ate Savarma!

 

அதேபோல அறந்தாங்கியில் அதே கடையில் சவர்மா வாங்கிச் சாப்பிட்ட 5 பேருக்கும் வாந்தி, பேதி ஏற்பட்டு அறந்தாங்கியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர்.

 

இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் கூறும்போது, “சவர்மா என்பது ரொட்டிக்குள் சிக்கன் வைத்து செய்யும் ஒருவகை உணவு. அதைச் சாப்பிட்ட அனைவருக்கும் வாந்தி, பேதி ஏற்பட்டுள்ளது. டாக்டர்களும் ஃபுட் பாய்சன் என்று சொல்கிறார்கள். கெட்டுப்போன சிக்கன் வைத்து எங்களுக்கு சவர்மா செய்து கொடுத்திருக்கிறார்கள். அதனால் எங்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது,” என்றனர்.

 

இத்தனை பேர் மருத்துவமனைக்குப் போன பிறகும் கூட, உணவு பாதுகாப்புத்துறை ஏனோ அமைதியாக இருந்துள்ளது. இந்தச் செய்தி சமூக வலைதளங்களில் பரவிய பிறகு, விசாரணையை மேற்கொண்டுள்ளது உணவு பாதுகாப்புத்துறை. உணவே மருந்து என்கிறார்கள் ஆனால் இங்கே?

 

சார்ந்த செய்திகள்

Next Story

13வது நோன்பு நாளில் சுடச்சுட ஆவி பறக்க தயாரான பிரியாணி

Published on 24/03/2024 | Edited on 24/03/2024
Ready-to-eat Biryani to bake on the 13th day of Lent

ஏப்ரல் மாதம் ரம்ஜான் பண்டிகை வருவதையொட்டி உலகம் முழுவதும் இஸ்லாமிய மக்கள் நோன்பு இருந்து வருகின்றனர். சூரியன் உதயம் முதல் அந்தி சாயும் வரை உணவு உண்ணாமல், நீர் அருந்தாமல் நோன்பு இருப்பர். மாலை 6 மணிக்கு மசூதிக்கு சென்று நமாஸ் செய்துவிட்டு உணவு உண்பார்கள். காலை 5 மணிக்கு முன்பாக உணவு உண்பதை நிறுத்திவிடுவர். நோன்பு காலத்தில் இயலாத மக்களுக்கு மதம் பார்க்காமல் உதவுவார்கள்.

வேலூர் கோட்டை எதிரே 400 கிலோ சிக்கன் கறி கொண்டு சுடச் சுட ஆவி பறக்க நோன்பு பிரியாணி தயார் செய்யப்பட்டது. வேலூர் மக்கான் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு 13 வது நோன்பு நாளில் பிரியாணி சமைத்து சுமார் 2000 வீட்டுக்கு பகிர்ந்து அளித்தனர்.

சனிக்கிழமை மாலை 5 மணியிலிருந்து பிரியாணி தயார் செய்யும் பணி தொடங்கிய நிலையில் நள்ளிரவு ஒரு மணி வரை பிரியாணி சமைக்கப்பட்டது. இந்தப் பணியில் சுமார் 130 பேர் ஈடுபட்ட நிலையில், மக்கான் பகுதியில் உள்ள வீடுகளுக்கு சுமார் அதிகாலை 2.30 மணிக்கு முன்பு பகிர்ந்தளிக்கப்பட்டது. ரம்ஜானை முன்னிட்டு 13 வது நோன்பு நாளில் அதிகாலையில் மக்கான் பகுதியில் உள்ள அனைத்து இஸ்லாமியர்களும் பிரியாணியை உண்டு மகிழ்ந்தனர்.

Next Story

கடத்தி செல்லப்பட்ட அரசுப் பேருந்து விபத்து

Published on 23/03/2024 | Edited on 23/03/2024
Hijacked government bus accident

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அரசுப் பேருந்து பணிமனையில் உள்ள அரசுப் பேருந்துகள் அனைத்தும் இரவு நேரங்களில் பணிமனைக்குள் நிறுத்த முடியாததால் அருகே உள்ள பட்டுக்கோட்டை சாலையில் வரிசையாக நிறுத்தப்பட்டிருக்கும். அதிகாலை முதல் ஒவ்வொரு பேருந்தும் அந்தந்த பயண நேரத்திற்கு ஓட்டுநர்கள் ஓட்டிச் செல்வார்கள்.

வழக்கம்போல் நேற்று இரவு பேருந்துகள் சாலை ஓரத்தில் நிறுத்தி வைத்துவிட்டு ஓட்டுநர், நடத்துநர்கள் பணிமனையில் ஓய்வெடுக்கச் சென்று விட்டார். இந்நிலையில் இன்று அதிகாலை திருவாடானை செல்லும் வழியில் ஓரியூர் அருகே வண்டாத்தூர் கிராமத்தில் பிரதானச் சாலையில் ஒரு அரசுப் பேருந்து ஒரு லாரியில் மோதி விபத்துக்குள்ளாகி நின்றது. சத்தம் கேட்டு கிராம மக்கள் ஓடி வந்து பார்த்தபோது லாரி ஓட்டுநர் காலில் பலத்த காயத்துடன் ரத்த வெள்ளத்தில் துடித்துக் கொண்டிருந்தார். அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்தில் சிக்கியிருந்த அந்த பேருந்து அறந்தாங்கி பணிமனையைச் சேர்ந்த அறந்தாங்கியில் இருந்து திருவாடானை செல்லும் TN 55 N 0690 என்பது தெரிய வந்தது. ஆனால் யார் இந்த பேருந்தை ஓட்டி வந்தது என்பது தெரியவில்லை. உடனே அறந்தாங்கி டெப்போவிற்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன் பிறகே சாலை ஓரம் வரிசையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்துகளில் திருவாடானை செல்லும் பேருந்து காணாமல் போனது தெரிய வந்தது.

பணிமனையில் நிறுத்தி இருந்த பேருந்தை யார் கடத்திச் சென்றது என்று போக்குவரத்து கழக அதிகாரிகளும் ஊழியர்களும் விசாரணையில் உள்ளனர். பாதுகாப்பு மற்றும் கவனக்குறைவால் ஒரு பேருந்து கடத்தப்பட்டு விபத்து ஏற்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.