Skip to main content

திடீர் வெள்ளம்... திணறும் பள்ளிபாளையம்!

Published on 01/10/2021 | Edited on 01/10/2021

 

Sudden flood in pallipalaiyam

 

நாமக்கல்லில் காற்றுடன் பலத்த மழை பொழிந்துவரும் நிலையில் பள்ளிபாளையத்தில் வெள்ளம் சூழ்ந்ததையடுத்து தீயணைப்புத் துறையினர் மீட்புப்பணியை மேற்கொண்டனர்.


நாமக்கல் மாவட்டம் ராசிபுரம், பட்டணம், ஆண்டலூர் கேட் ஆகிய பகுதிகளில் காற்றுடன் கூடிய பலத்த மழை பொழிந்து வருகிறது. குமாரபாளையம் பகுதியில் விடிய விடிய கனத்த மழை பொழிந்தது. அதேபோல் திருச்செங்கோடு, பள்ளிபாளையம் பகுதியிலும் பலத்த மழை பொழிந்த நிலையில், பள்ளிபாளையத்தில் வெள்ளம் சூழ்ந்தது. பள்ளிபாளையம் அருகே நான்குவழிச் சாலை அருகே உள்ள கால்வாயில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் சாலையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. சாலையில் மூன்றடிக்கும் மேல் நீர் ஓடியதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகினர். இதனால் அங்கு நான்கு மணிநேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கார் உள்ளிட்ட வாகனங்கள் இந்த திடீர் வெள்ளத்தில் சிக்கியதால் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படையினர் காரில் சிக்கியவர்களைக் கயிற்றைக் கொண்டு மீட்டனர். இந்நிலையில் பள்ளிபாளையத்தில் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற  நடவடிக்கை எடுக்கப்படும் என நாமக்கல் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தமிழ்நாடு கேட்டது... மத்திய அரசு கொடுத்தது - நிவாரண நிதி ஒதுக்கீடு!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Central government relief fund allocation to tamilnadu

தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக கடந்த டிசம்பர் மாதம் வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டது. இதன் காரணமாகச் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து தென்மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களும் அதிக கனமழையினால் பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.

அதே சமயம் மிக்ஜாம் புயல் மற்றும் தென் மாவட்ட வெள்ள பாதிப்புகளுக்கு நிவாரணம் கோரி தமிழக முதலமைச்சரும், தலைமைச் செயலாளரும் மத்திய அரசுக்கு பலமுறை கடிதம் அனுப்பியும் மத்திய அரசு இதுவரை நிதி வழங்காமல் இருந்தது.

இதற்கிடையில், வெள்ள பாதிப்புகளுக்கு இடைக்கால நிவாரணமாக ரூ.2 ஆயிரம் கோடி வழங்க உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் கடந்த 3ஆம் தேதி தமிழக அரசு மனு தாக்கல் செய்தது. அந்த மனுவில், கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் தமிழகம் சந்தித்து வரும் இயற்கை பேரிடர்கள் பற்றியும் அதன் விவரங்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. தமிழக அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் வில்சன் பெயரில், தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர் குமணன் இந்த மனுவை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில், தமிழகத்தில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல், வெள்ள பாதிப்புகளுக்கு தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து நிவாரண நிதியை வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இது குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘தமிழ்நாட்டில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் நிவாரண நிதியாக ரூ.285 கோடியை வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும், தமிழகத்தில் 2023 டிசம்பர் மாதத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்காக ரூ.397 கோடி வழங்கவும் மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. அதில் முதற்கட்டமாக ரூ.285 கோடி மிக்ஜாம் புயல் பாதிப்புக்கான நிதியில் இருந்து ரூ.115 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. அதே போல், வெள்ள பாதிப்புக்காக மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ள ரூ.397 கோடி நிதியில் இருந்து ரூ.160 கோடியை தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு விடுவித்துள்ளது’ எனத் தெரிவித்துள்ளது.

மிக்ஜாம் புயல், வெள்ள பாதிப்புகளுக்காக தமிழ்நாடு அரசு ரூ.38,000 கோடி நிவாரணம் வழங்க கோரியிருந்த நிலையில், மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு குறைந்தபட்ச அளவில் நிவாரண நிதி வழங்கியுள்ளதாக பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Next Story

தனியார் கல்லூரி பேருந்து மோதி 6 வயது சிறுவன் உயிரிழப்பு

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
6-year-old boy lost their live in private college bus crash

நாமக்கல்லில் தனியார் கல்லூரி பேருந்து மோதி ஆறு வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஈரோடு சாலையில் உள்ள  தோட்ட வாடி கிராமத்தில் உள்ள பேருந்து நிலைய பகுதியில் கூட்டப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த சதீஷ் என்பவர் இருசக்கர வாகனத்தில் தன்னுடைய 6 வயது மகனுடன் சென்று கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்திற்குப் பின்புறம் வந்த தனியார் கல்லூரி பேருந்து எதிர்பாராத விதமாக மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே 6 வயது சிறுவன் தலை நசுங்கி உயிரிழந்தார். தந்தை சதீஷ்குமாரின் கை முறிந்து துண்டானது.

இந்தச் சம்பவம் அங்குப் பரபரப்பை ஏற்படுத்த, உடனடியாக அங்கு வந்த போலீசார் சிறுவனின் உடலைக் கைப்பற்றி  பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அந்தப் பகுதிகளில் காலை நேரத்தில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருப்பதாகவும், அந்த நேரத்தில் தனியார் பேருந்துகள் மிகுந்த வேகத்துடன் செல்வதால் சாலைத் தடுப்பு, வேகத்தடை ஆகியவற்றை அமைத்துக் கொடுக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

திருச்செங்கோடு காவல் நிலைய போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தனியார் கல்லூரி பேருந்து மோதி 6 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.