
தென் மேற்கு பருவமழையின் தாக்கம் மே மாதம் தொடங்கினாலும் போதுமான சூழல் தென்படாமல் போகவே அருவிகளில் மே, ஜூனில் தண்ணீர் வரத்து இல்லாமலிருந்தது. இந்தச் சூழலில் கடந்த வாரம் இதமான சீதோஷ்ணம் காரணமாக சாரல் மழை நீர்ப்பிடிப்பு பகுதியில் பொழிய, அருவிகளில் தண்ணீர் வரத்து காணப்பட்டது. ஆனால் விடுமுறை நாட்களில் மட்டுமே சுற்றுலா பயணிகளின் வரத்து அதிகம் காணப்பட்டது.
இதனிடையே கடந்த சில நாட்களாக வெயில் அடித்த போதிலும் அருவிகளில் ஓரளவு தண்ணீரே விழுந்தது. இந்தச் சமயத்தில் நேற்று காலை குற்றாலத்தில் வெயில் அனலாக அடித்த நிலையில் மதியத்திற்குப் பிறகு சீசன் மாறி மழை பொழியத் தொடங்கியது. தொடர்ந்து மாலை 5.30 மணியளவில் குற்றாலத்தில் ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்ததன் விளைவாக சுமாராகத் தண்ணீர் விழுந்து கொண்டிருந்த மெயின் அருவியில் திடீரென்று வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால் தடுப்பையும் தாண்டி வெள்ளம் கொட்டியது. உஷாரான காவல்துறையினர் ஒலி பெருக்கியின் மூலம் எச்சரிக்கை விடுத்தனர். இதனால் அருவியில் குளித்துக் கொண்டிருந்த ஆண்கள், பெண்கள் பயத்தில் வெளியேறினர். பெண்கள் பகுதியில் கூச்சல்கள் கிளம்பின. 2 பெண்கள் வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்டனர். பணியாளர்கள், காவல்துறையினர், தீயணைப்புப் படையினர் விரைந்து செயல்பட்டனர். இதில் ஆண்கள் பகுதியில் விழுந்த மூன்று பேர் உடனடியாக மீட்கப்பட்டனர். மற்றொருவர் இரண்டாம் பாலம் அருகே மீட்கப்பட்டார். ஆனால் அடித்துச் செல்லப்பட்ட பெண்களை மீட்க முடியவில்லை. கண்ணெதிரே நடந்த சம்பவத்தைக் கண்டு கூச்சலிட்டனர். இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் வெள்ளத்தையும் பொருட்படுத்தாமல் இறங்கித் தேடினர். இதில் 2 பெண்களின் உடல்களும் மீட்கப்பட்டது.

பண்ருட்டி நகரின் அன்வர்ஷா காலனியைச் சேர்ந்த ராஜாராம் மனைவி கலாவதி (55) மற்றும் சென்னை பெரம்பூர் தேசிய காலனி ஜமாலியா நகரைச் சேர்ந்த விஜயகுமார் மனைவி மல்லிகா (42) இருவரும் மீட்கப்பட்டு மருத்துவர்கள் மூலம் பரிசோதனை செய்யப்பட்டபோது அவர்கள் ஏற்கனவே இறந்தது தெரியவந்தது.
குற்றால அருவிகளின் வரலாற்றில் இதுபோன்று வௌ்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சம்பவம் நடந்ததில்லை.