புதுச்சேரி பாரதிதாசன் மகளிர் கல்லூரியில் சுமார் 1000-க்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர்.
இந்நிலையில் கல்லூரியில் உள்ள சமூக அறிவியல் பிரிவு கட்டிடத்தில் மின்சார கசிவு காரணமாக திடீரென கணினிகள் வைக்கப்பட்டிருந்த அறையில் தீ விபத்து ஏற்பட்டது. இதனைக் கண்ட மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் அலறி அடித்துக் கொண்டு வெளியேறினர். தொடர்ந்து தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்புத்துறை வீரர்கள் துரிதமாக செயல்பட்டு தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் சுமார் ஒரு லட்சம் மதிப்பிலான கணினி மற்றும் பொருட்கள் எரிந்து சாம்பலானது. இதுகுறித்து முத்தியால்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.