
முத்துப்பேட்டை அருகே பொதுமக்கள் அனைவரிடமும் பாசம் காட்டி சுற்றிவந்த குரங்கு ஒன்றை நாய் கடித்து இறந்துவிட்டது. அந்த குரங்கை புதைத்த கிராம மக்கள் அந்த இடத்தில் கோவில் கட்டுவதற்கான பூஜையையும் செய்துள்ளனர்.
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்துள்ளது தம்பிக்கோட்டை கீழக்காடு கிராமம். அந்த பகுதியில் கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக குரங்கு ஒன்று சுற்றித்திரிந்தது. ஆரம்பத்தில் எல்லோரிடம் அன்பு காட்டி வந்தாலும், இடையில் பல இடையூறுகளையும் கொடுத்திருக்கிறது. கோபமடைந்த கிராம மக்களால் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்து பிடித்துச் செல்ல வைத்தனர். பலமைல் தூரத்திற்கு அப்பால் உள்ள வனப்பகுதியில் விட்டபோதிலும், வளர்ந்த அதே பகுதிக்கு தேடிப்பிடித்து மீண்டும் ஓடிவந்து பழையபடி பலரிடமும் பாசத்துடன் உலா விவந்தது. மக்களும் பாசத்துடன் அதற்கு தேவையான உணவுகளை வழங்கினர். கிராமத்திற்குச் செல்லப்பிள்ளை போலவே குரங்கு இருந்துள்ளது.
இந்தநிலையில் இந்த குரங்குக்கு வயது முதிர்வு ஏற்பட்டு பற்கள் கொட்டி உடல் நிலையில் மாற்றம் ஏற்பட்டு சோர்வுடனேயே வீதிகளில் சுற்றிவந்தது. இந்த சூழலில் ஐந்து தினங்களுக்கு முன்பு கூட்டமாக வந்த தெரு நாய்கள், மிக மிக சோர்வாக உட்கார்ந்திருந்த குரங்கை கடித்து குதறியது. உடலில் பலத்த காயம் ஏற்பட்டு கீழே வராமல் மரங்களிலும் வீடுகளின் மேலேயும் உணவின்றி தங்கி வந்தநிலையில் திடீரென இறந்தது.
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த கிராம மக்கள், வீட்டில் ஒருவர் இறந்தது போன்று துக்கம் அனுசரித்தனர். இதையடுத்து சிறப்பு வாய்ந்த சிவாச்சாரியார்களை வரவழைத்து குரங்கிற்கு இறுதி சடங்குகள் செய்து முறையாக நல்லடக்கம் செய்தனர். குரங்கு அடக்க ஸ்தலத்தில் கோயில் கட்டவும் பொதுமக்கள் தீர்மானித்து அதற்கான பூஜைகளையும் செய்தனர்.
இதுகுறித்து அதேபகுதி ஊராட்சி மன்றத் தலைவரின் கணவர் வீரையன் கூறுகையில், "சுமார் 20 வருடங்களுக்கு மேலாக இதேபகுதியில் தங்கி இங்குள்ளோர் கொடுக்கும் உணவை உண்டு உறவாக இருந்தது. வயதான குரங்கை தெருநாய்கள் கூடி கடித்தன. இதனால் காயமடைந்த குரங்கு சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டது. இதையடுத்து குரங்கை அடக்கம் செய்த இடத்தில் கோயில் கட்ட பொதுமக்கள் தீர்மானித்துள்ளனர். ஆரம்பத்தில் வீடுகளுக்குள் புகுந்து அடாவடி செய்துவந்தது. குரங்கை பிடித்து பல மைல்கள் தாண்டி கொண்டுவிடச் செய்தோம். ஆனால் அடுத்த சில நாட்களில் இங்கேயே திரும்பி வந்து விட்டது. அதன்பிறகு யாருக்கும் தொந்தரவு கொடுக்காமல் மக்களோடு மக்களாக வாழ்ந்துவந்த குரங்கு இறந்தது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது" என்கிறார்.