Sudden confrontation between the two factions at midnight; 13 arrested in action

Advertisment

சேலத்தில் திங்கள்கிழமை (02.08.2021) நள்ளிரவில் திடீரென்று குடிபோதையில் இரு சமூகத்தினரிடையே மோதல் மூண்டது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இரு தரப்பையும் சேர்ந்த 13 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சேலம் கந்தப்பட்டியைச் சேர்ந்தவர் குமார் என்கிற பரோட்டா குமார். அதே பகுதியில் உள்ள எம்ஜிஆர் நகரைச் சேர்ந்தவர் அசோக்குமார். திங்கள்கிழமை அப்பகுதியில், தங்கள் கோஷ்டியினருடன் மது குடித்துக்கொண்டிருந்தனர்.

இருவரும் வேறு வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள். மது போதை உச்சத்தை அடைந்த நிலையில், இரண்டு கோஷ்டியினருக்கும் இடையே ஏதோ வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் எல்லை மீறி கைகலப்பாக மாறியது.

Advertisment

இந்த மோதலில் அசோக்குமார் பலத்த காயமடைந்தார். இதையடுத்து அவர் உடனடியாக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்த தகவல் அறிந்த அசோக்குமார் தரப்பைச் சேர்ந்த 20 பேர், திரவுபதி அம்மன் கோயில் அருகே திரண்டனர்.

அதே பகுதியைச் சேர்ந்த கருப்புசாமி என்பவர் வீட்டின் கண்ணாடியைக் கல்வீசி நொறுக்கினர். இருசக்கர வாகனத்தையும் சேதப்படுத்தினர். அப்போதும் ஆத்திரம் தணியாத அவர்கள் மது பாட்டில்களில் திரி கொளுத்தி, வெடிகுண்டாக வீசியெறிந்தனர்.

இந்தக் களேபரங்கள் குறித்து சேலம் மாநகரக் காவல்துறைக்குத் தாமதமாகவே தகவல் கிடைத்தது. இதையடுத்து சூரமங்கலம் காவல் நிலைய காவல்துறையினர் சம்பவ இடம் விரைந்தனர். அதற்குள் கலவரக் கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியது.

Advertisment

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியில் இரு சமூகத்தினரிடையே மோதல் ஏற்பட்டது. அதேபோன்ற சம்பவம் மீண்டும் நடந்துவிடக் கூடாது என சுதாரித்த காவல்துறையினர், பரோட்டா குமார், குமார் உள்பட 8 பேரையும், அசோக்குமார் தரப்பைச் சேர்ந்த சித்தக்குட்டி உள்ளிட்ட 5 பேரையும் கைது செய்தனர். பிடிபட்ட நபர்களிடம் தீவிர விசாரணை நடந்துவருகிறது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவல்துறை துணை ஆணையர்கள் மோகன்ராஜ், வேதரத்தினம், கூடுதல் துணை ஆணையர் கும்மராஜா, உதவி ஆணையர் நாகராஜன் ஆகியோர் தலைமையில் காவல்துறை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ரோந்துப் பணிகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளன.