
கொடைக்கானலில் கரோனா பரவும் அபாயம் காரணமாக திறக்கப்பட்ட 2 நாளில் மீண்டும் பூங்காக்கள் மூடப்பட்டதால் கொடைக்கானலுக்கு வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
சர்வதேச சுற்றுலாத் தலமான கொடைக்கானலில் ஆண்டுதோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் படையெடுப்பது வழக்கம். ஆனால், கரோனா என்னும் கொடிய நோயால் மலைகளின் இளவரசியான கொடைக்கானலுக்குச் சுற்றுலாப் பயணிகள் வருவதற்குத் தடை விதிக்கப்பட்டது. தற்போது கரோனா குறைந்ததின் எதிரொலியாக கொடைக்கானலுக்கு சுற்றுலாப் பயணிகள் நேற்று முன்தினம் (05.07.2021) முதல் அனுமதிக்கப்பட்டனர்.
மேலும், சுற்றுலா பயணிகளை வரவேற்கும் வகையில் கொடைக்கானலில் உள்ள ரோஜா பூங்கா, செட்டியார் பூங்கா, கோக்கர்ஸ் ஆகியவை திறக்கப்பட்டன. வழிமேல் விழிவைத்து எதிர்பார்த்து காத்திருந்த சுற்றுலாப் பயணிகள் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து கொடைக்கானலுக்குப் படையெடுத்தனர். பூங்காக்களில் சுற்றித் திரிந்த பூக்களைப் பார்த்து ரசித்தனர்.

இந்நிலையில், திறக்கப்பட்ட பூங்காக்களில் ஆர்.டி.ஓ. முருகேசன் தலைமையிலான அதிகாரிகள் நேற்று ஆய்வுசெய்தனர். அதன்படி நகராட்சி ஆணையாளர் நாராயணன், தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் சீனிவாசன், இணை இயக்குநர் ரமேஷ், தாசில்தார் சந்திரன், சுற்றுலா அலுவலர் ஆனந்தன், நகர்நல அலுவலர் சுப்பையா, நகரமைப்பு அதிகாரி அப்துல் நாசர், அலுவலர் பார்த்தசாரதி, பூங்கா மேலாளர் சிவபாலன் மற்றும் பல்வேறு துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது பூங்காக்களில் தனிமனித இடைவெளி இன்றியும் முகக்கவசம் அணியாமலும் சுற்றுலா பயணிகள் இருந்தது தெரியவந்தது. இது தொடர்பாக சுற்றுலாப் பயணிகளை எச்சரித்த ஆர்.டி.ஓ, அவர்களுக்கு அறிவுரை வழங்கினார். மேலும், இதுதொடர்பாக கலெக்டர் விசாரணைக்கு அவர் தகவல் தெரிவித்தார். இதேநிலை நீடித்தால் கொடைக்கானலில் மீண்டும் தொற்று பரவ வாய்ப்புள்ளது என்று அதிகாரிகள் கருதினர். இதனையடுத்து அனைத்துத் துறை அதிகாரிகளுடன் ஆர்.டி.ஓ. முருகேசன் ஆலோசனை நடத்தினார்.

அதன்பின் பத்திரிகையாளர்களுடன் பேசும்போது, ''கரோனா குறைந்ததால் கொடைக்கானல் பசுமை பகுதியாக அறிவிக்கப்பட உள்ளது. தற்போதுவரை கொடைக்கானல் தாலுகா முழுவதும் மருத்துவமனை மற்றும் வீடுகளில் 13 நோயாளிகள் மட்டுமே உள்ளனர். ஊட்டி, ஏற்காடு பகுதிகளில் சுற்றுலா இடங்கள் திறக்கப்படவில்லை. இதன் கார ணமாக கொடைக்கானல் நகருக்கு சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருகை தருகின்றனர். இவர்கள் தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக் காமலும், முகக் கவசம் அணியாமலும் இருப்பதால் நோய் தொற்று பரவும் அபாயமுள்ளது. இது தொடர்பாக அனைத்துத் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. அதனடிப்படையில் கொடைக்கானல் திறக்கப்பட்ட பிறகு செட்டியார் பூங்கா, ரோஜா பூங்கா மற்றும் கோக்கர்ஸ் வாக் ஆகியவை நாளைமுதல் மறுஉத்தரவு வரும்வரை மூடப்படுகிறது. இதேபோல் கொடை க்கானலுக்கு வருகைதரும் சுற்று லாப் பயணிகளுக்கு நோய்த்தொற்று பரிசோதனை செய்வதற்கான ஏற்பாடுகளும் நடந்துவருகிறது. இருப்பினும் சுற்றுலா பயணிகள் வருவதற்குத் தடையும் இல்லை. கொடைக் கானலில் தற்போது நிலவும் மிதமான பருவநிலையை சுற்றுலா பயணிகள் அனுபவித்துவிட்டுச் செல்லலாம். தொற்று பரவாமல் இருப்பதற்காகவே பூங்காக்கள் மூடப்பட்டுள்ளன. இதற்கு கொடைக்கானல் பொது மக்கள் ஆதரவளிக்க வேண்டும்'' என்று கூறினார்.
இதற்கிடையே கொடைக்கானல் நீண்ட நாட்களுக்குப் பிறகு திறக்கப்பட்டதால் சுற்றுலாத் துறையை நம்பியுள்ள தொழிலாளர்கள் மகிழ்ச்சியடைந்தனர். ஆனால் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் திறக்கப்பட்ட பூங்காக்களுக்கு இரண்டு நாளில் மூடுவிழா நடத்தியிருப்பது அனைத்து தரப்பினரையும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)