ADVERTISEMENT

பிரதமர் மோடியின் தமிழக பயணத் திட்டத்தில் திடீர் மாற்றம்!

11:46 PM Mar 11, 2024 | prabukumar@nak…

பிரதமர் மோடி இரண்டு நாள் சுற்றுப் பயணமாக கடந்த பிப்ரவரி 27 மற்றும் 28 ஆம் தேதி தமிழகம் வந்திருந்தார். அதன்படி 27 ஆம் தேதி திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடைபெற்ற பா.ஜ.க. நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இதனையடுத்து இரண்டாவது நாளாக கடந்த 28 ஆம் தேதி தூத்துக்குடியில் நடைபெற்ற பல்வேறு திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அதனைத் தொடர்ந்து பிரதமர் மோடி கடந்த 4 ஆம் தேதி (04-03-2024) ஒருநாள் பயணமாகத் தமிழகம் வந்திருந்தார். அதன்படி கல்பாக்கம் அதிவேக ஈனுலை மின் உற்பத்தியின் தொடக்கப் பணிகளைப் பார்வையிட்டதுடன், 500 மெகாவாட் திறன் கொண்ட ஈனுலையில் கோர் லோடிங் பணியைப் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அதன்பின்னர் சென்னை நந்தனம் மைதானத்தில் நடைபெற்ற பா.ஜ.க.வின் தாமரை மாநாடு பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார்.

ADVERTISEMENT

இத்தகைய சூழலில் பிரதமர் மோடி மீண்டும் தமிழகத்தில் 3 நாட்கள் பயணம் மேற்கொள்ள இருந்தார். அதாவது 15 ஆம் தேதி சேலத்திற்கும், 16 ஆம் தேதி கன்னியாகுமரிக்கும், 18ம் தேதி கோவைக்கும் பிரதமர் மோடி செல்ல உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி இருந்தன. இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடியின் தமிழக சுற்றுப்பயணத் தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதாவது மார்ச் 15 ஆம் தேதி பிரதமர் மோடி சேலம் வருவதாகத் தெரிவிக்கப்பட்ட நிலையில் தற்போது மார்ச் 19 ஆம் தேதி வருவார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆண்டில் இதுவரை 4 முறை பிரதமர் மோடி தமிழகம் வந்துள்ள நிலையில் மார்ச் 19 ஆம் தேதி 5வது முறையாக வர உள்ளார்.

ADVERTISEMENT

முன்னதாக இந்தியத் தேர்தல் ஆணையர் அருண் கோயல் தனது பதவியை நேற்று முன்தினம் (09.03.2024) ராஜினாமா செய்திருந்தார். இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தலைமை ஆணையராக ராஜீவ் குமார், ஆணையர்களாக அனுப் சந்திர பாண்டே, அருண் கோயல் ஆகியோர் பதவி வகித்து வந்தனர். இதனிடையே அனுப் சந்திர பாண்டே பணி ஓய்வு பெற்ற நிலையில் இந்த காலியிடம் நிரப்பப்படாமல் இருந்து வந்தது. அதே சமயம் மற்றொரு தேர்தல் ஆணையர் அருண் கோயலின் பதவிக் காலம் 2027 ஆம் ஆண்டு வரை உள்ள நிலையில், தனது பதவியை ராஜினாமா செய்ததன் மூலம் தேர்தல் ஆணையர் காலி இடங்களின் எண்ணிக்கை 2ஆக உயர்ந்துள்ளது. மேலும் தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் மட்டுமே தற்போது பதவியில் உள்ளார். புதியதாக இரு தேர்தல் ஆணையர்களை நியமிப்பது குறித்து மார்ச் 15இல் மத்திய அரசு ஆலோசனை நடத்த உள்ளது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய அமைச்சர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் இணைந்து தேர்தல் ஆணையரைத் தேர்ந்தெடுக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT