/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th_2445.jpg)
சேலம் அருகே, அடுத்தடுத்து மூன்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட இரண்டு குழந்தைகளின் தாயார் உயிரிழந்தது தொடர்பாக, சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனை மூடி 'சீல்' வைக்கப்பட்டது.
சேலம் மாவட்டம், ஜலகண்டாபுரம் சவுரியூர் பகுதியைச் சேர்ந்தவர் பூபதி (31). இவருடைய மனைவி சங்கீதா (28). இவர்களுக்கு 11 வயதில் பெண் குழந்தையும், 7 வயதில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளன. இந்த நிலையில் சங்கீதாவுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்வதற்காக, கடந்த 20 நாள்களுக்கு முன்பு இடைப்பாடியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்ந்தார். அங்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. வீட்டில் ஓய்வில் இருந்து வந்த அவருக்கு, அறுவை சிகிச்சை முடிந்த 15 நாளில் இருந்து அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டுள்ளது.
அதனால், மீண்டும் அதே மருத்துவமனையில் சிகிச்சைக்கு சென்றார். பரிசோதனை செய்து பார்த்த மருத்துவர்கள், வயிற்றில் ரத்தம் கட்டியிருப்பதாகவும், மீண்டும் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அவருக்கு மீண்டும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட சங்கீதா, வீட்டில் இருந்தபடியே மருந்து, மாத்திரைகள் எடுத்து வந்தார். இந்நிலையில் மே 29ம் தேதி திடீரென்று அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. மீண்டும் அதே மருத்துவமனையில் அவருக்கு மூன்றாவது முறையாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், மே 30ம் தேதி காலை அவருடைய உடல்நிலை மோசமடைந்தது. திடீரென்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த சங்கீதாவின் உறவினர்கள், மருத்துவர்களின் அலட்சியத்தால்தான் அவர் உயிரிழந்ததாகக் கூறி ரகளையில் ஈடுபட்டனர். மருத்துவமனையில் இருந்த பொருள்களை அடித்து நொறுக்கினர். சங்கீதாவின் இறப்புக்குக் காரணமான மருத்துவர்களை கைது செய்ய வேண்டும் எனக்கூறி, மருத்துவமனை முன்பு உறவினர்கள் வெள்ளாண்டிவலசை முதன்மை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து அங்கு வந்த காவல்துறையினர், அவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.
ஆனாலும் அவர்கள் மருத்துவமனையை மூடி 'சீல்' வைக்க வேண்டும் என்று வலியுறுத்தி, போராட்டத்தைத் தொடர்ந்தனர். இதையடுத்து, செவ்வாய்க்கிழமை (மே 31) அதிகாலை, வட்டாட்சியர் லெனின் தலைமையிலான வருவாய்த்துறை அலுவலர்கள், அந்த மருத்துவமனையை பூட்டி 'சீல்' வைத்தனர். மேலும், சங்கீதாவின் சடலத்தைக் கைப்பற்றிய காவல்துறையினர், உடற்கூராய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 10 நோயாளிகளையும் வேறு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனால் சமாதானம் அடைந்த உறவினர்கள், போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவம், இடைப்பாடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)