Skip to main content

பூச்சி மருந்து குடித்து துணை ஆய்வாளர் தற்கொலை

Published on 25/09/2023 | Edited on 25/09/2023

 

Deputy inspector commits suicide by drinking pesticide

 

தென்காசி மாவட்டம், சுரண்டை அருகே உள்ள பாண்டியாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பசுபதி (55). இவர் ஊத்துமலை காவல் நிலையத்தில் காவல் துணை ஆய்வாளராக பணியாற்றி வந்தார். இவருடைய மனைவி பெயர் மணிமேகலை (48). இவர்களுக்கு விக்னேஷ் (29), வினித் (27) ஆகிய இரண்டு மகன்கள் இருக்கின்றனர். காவல் துணை ஆய்வாளர் பசுபதி தனது குடும்பத்தினருடன் சுரண்டை நகராட்சிக்குட்பட்ட கீழ்சுரண்டை பகுதியில் புதிதாக சொந்த வீடு கட்டி குடியிருந்து வந்தார்.

 

இந்த நிலையில், கடந்த 23ஆம் தேதி, பசுபதியின் குடும்பத்தினரான மகன்களும், மனைவி மணிமேகலையும் தங்களது சொந்த வேலைக்காக வெளியே சென்றுள்ளனர். பசுபதி மட்டும் வீட்டில் தனியாக இருந்து வந்துள்ளார். அப்போது அவர், வயலுக்கு அடிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை எடுத்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். வெளியே சென்ற மணிமேகலை, வீட்டிற்கு வந்த பார்த்த போது நுரை தள்ளிய நிலையில் பசுபதி மயக்க நிலையில் இருந்தார். இதை கண்டு அதிர்ச்சியடைந்த மணிமேகலை, அக்கம்பக்கத்தினரை அழைத்துள்ளார். அதனை தொடர்ந்து அவர்கள், 108 ஆம்புலன்ஸ் மூலம் பசுபதியை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

 

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த சம்பவத்தை அறிந்த சுரண்டை காவல்துறையினர் மருத்துவமனைக்கு சென்று இது குறித்து விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து, நேற்று (24-09-23) காலை பசுபதி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். பசுபதி தற்கொலை குறித்து அவரின் குடும்பத்தினரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். 

 

அப்போது அவர்கள், பசுபதிக்கு நீண்ட காலமாக நீரிழிவு நோய் இருந்ததால் ஆறாத புண்களால் அவதிப்பட்டு வந்துள்ளார். மேலும், கடந்த சில வாரங்களாக பணியிடத்தில் கடுமையான பணிச்சுமையால் மிகவும் மன அழுத்தத்துடன் காணப்பட்டார் என்று கூறினர். அதனைத் தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

 புதுக்கோட்டை மாவட்டத்தில் 41 எஸ்.ஐ கள் பணியிடமாற்றம்!

Published on 24/01/2024 | Edited on 24/01/2024
41 sub inspector transfer in Pudukkottai district!

நாடாளுமன்றத் தேர்தல் விரைவில் வரவுள்ள நிலையில் இந்தியா முழுவதும் தேர்தல்களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

இந்த நிலையில் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணி செய்து வரும் வருவாய் மற்றும் காவல் துறை அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்.

ad

அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் பணியில் உள்ள காவல் உதவி ஆய்வாளர்கள் 41 பேர் பணியிடமாற்றம் செய்யப்பட்டு உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது.

Next Story

மயக்க ஊசி போட்டு மருத்துவ மாணவி தற்கொலை; போலீசிடம் சிக்கிய உருக்கமான கடிதம்

Published on 07/12/2023 | Edited on 07/12/2023

 

Medical student incident; letter caught by the police

 

கேரளா மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள வெஞ்ஞாரமூடு பகுதியைச் சேர்ந்தவர் அப்துல் அசீஸ். இவரது மகள் ஷஹ்னா (28) எம்.பி.பி.எஸ் படிப்பு முடித்துள்ளார். இதனையடுத்து, இவர் திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரியில் அறுவை சிகிச்சைப் பிரிவில் முதுகலை படித்து வந்தார். மேலும், ஷஹ்னா தன்னுடன் படிக்கும் சக மாணவிகளுடன் மருத்துவக் கல்லூரி அருகே உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி படித்து வந்தார். 

 

இதற்கிடையே, ஷஹ்னாவுக்கு திருமண ஏற்பாடுகள் நடந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், நேற்று முன் தினம் (05-12-23) ஷஹ்னாவுக்கு மருத்துவமனையில் இரவு பணி இருந்தது. ஆனால், அவர் பணிக்கு செல்லாமல் அறைக்குள்ளே தங்கியிருந்தார். இதனால், சந்தேகமடைந்த சக மாணவிகள் அவரது அறைக்கு சென்று பார்த்தபோது, கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. மேலும், அவர்கள் நீண்ட நேரம் கதவை தட்டியும் கதவு திறக்கப்படவில்லை. அதனால், கதவை உடைத்து திறந்து பார்த்துள்ளனர். அங்கு ஷஹ்னா மயங்கிய நிலையில் கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த மாணவிகள் அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். 

 

அங்கு, அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து, அவரது உடலை மருத்துவர்கள் பரிசோதனை செய்து பார்த்துள்ளனர். அப்போது, ஷஹ்னா நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சையின் போது செலுத்தும் மயக்க ஊசியை தானே போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்ற அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. இந்த தகவலை அறிந்த போலீசார் மருத்துவமனைக்கு விரைந்து சென்று தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர்.

 

அந்த விசாரணையில், தற்கொலை செய்து கொண்ட மருத்துவர் ஷஹ்னா, தன்னுடன் படித்து வந்த ஒருவரை காதலித்து வந்துள்ளார். இவர்களுக்குள் திருமணம் நடத்த காதலன் வீட்டில் சம்மதித்துள்ளனர். ஆனால், வரதட்சணையாக 150 பவுன் நகை, 15 ஏக்கர் நிலம், பிஎம்டபிள்யூ கார் ஆகியவை வேண்டும் என்று காதலன் வீட்டில் கட்டாயப்படுத்தியுள்ளனர். இந்த வரதட்சணையை கொடுக்க முடியாததால் மனமுடைந்து போன ஷஹ்னா தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்று போலீசாருக்கு தெரியவந்தது. இதனையடுத்து, ஷஹ்னா தங்கியிருந்த அறையை போலீசார் தீவிர சோதனை நடத்தினர். 

 

அந்த சோதனையில், தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு ஷஹ்னா தன் கைப்பட எழுதிய கடிதத்தை போலீசார் மீட்டனர். அந்த கடிதத்தில், ‘இந்த உலகத்தில் அன்பிற்கு எந்த மரியாதையும் கிடையாது. எனது அப்பா போய்விட்டார். திருமணத்திற்கு வரதட்சணையாக கூடை கூடையாக பணம் கொடுக்க எனக்கு யாரும் இல்லை. எல்லோருக்கும் பணம் மட்டும் தான் வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து, அந்த கடிதத்தை கைப்பற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.