Skip to main content

பணி மாறுதல் பெற்ற சார் ஆட்சியர்..! மீண்டும் வரவேண்டுமென நெகிழும் மக்கள்..! 

Published on 16/06/2021 | Edited on 16/06/2021

 

Sub Collector Anu who got transfer..

 

புதிதாகப் பதவியேற்ற  முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு, சமீப நாட்களாக மாநிலம் முழுவதும் மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட கண்காணிப்பாளர்கள் உட்பட பல்வேறு துறைகளில் பணியாற்றி வரும் உயர் பதவி வகிப்பவர்களை அதிரடியாக  பணி மாறுதல் செய்து வருகிறது. அப்படி பணி மாறுதல் செய்யப்பட்டவர்களில் ஒருவர் திண்டிவனம் சார் ஆட்சியர் சீ. அனு. ஐ.ஏ.எஸ். 

 

கேரள மாநிலத்தைச் சேர்ந்த இவர், கடந்த 2019 அக்டோபர் மாதம் திண்டிவனம் சார் ஆட்சியராக பணியமர்த்தப்பட்டார். இளம் வயது பெண் ஐ.ஏ.எஸ். ஆன இவரது செயல்பாடுகள் எப்படி இருக்குமோ என அப்பகுதி மக்கள் எண்ணினார்கள். ஆனால், இவரது 20 மாத பனிக்காலத்தில் மிகவும் திறமையாக, செம்மையாக, துணிவாக மக்கள் பணி செய்து திண்டிவனம் கோட்டத்தில் உள்ள மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். 

 

திண்டிவனம் மேல்மலையனூர், செஞ்சி, மரக்காணம் ஆகிய தாலுகாக்களுக்கு உட்பட்ட பகுதிகளில் வசித்து வரும் பழங்குடி இருளர் மக்களின் பிள்ளைகள் படிப்பு மற்றும் வேலைவாய்ப்புக்காக சாதிச் சான்றிதழ் கேட்டு பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தார்கள். இவர்களின் மனுக்களை முறையாக ஆய்வு செய்த சார் ஆட்சியர் அனு, அவர்களுக்கு சாதிச் சான்றிதழ் வழங்கினார். இது மட்டுமின்றி, கல் குவாரிகளில் இருந்து லோடு ஏற்றிச் செல்லும் லாரிகளை மடக்கிப் பிடித்து, விசாரணை செய்து பர்மிட் இல்லாத லாரிகளை காவல் நிலையங்களில் ஒப்படைத்து வழக்குப் போட வைத்துள்ளார். பிள்ளைகளுக்கும் பேரப்பிள்ளைகளுக்கும் தங்கள் சொத்துக்களை எழுதிவைத்துவிட்டு அவர்களின் அரவணைப்பும் கவனிப்பும் இல்லாமல் இருந்த முதியோர்கள், அவர்களின் நிலையை மனுவாக சார் ஆட்சியர் அனுவிடம் கொடுத்தபோது, அந்த மனுக்கள் மீது உரிய விசாரணை செய்து அவர்கள் தங்கள் வாரிசுகளுக்கு எழுதிக்கொடுத்த சொத்துக்களை மீட்டு அந்த முதியோர்கள் தங்கள் இஷ்டபடி அனுபவித்துக் கொள்ள வழிவகை செய்தார். 

 

Sub Collector Anu who got transfer..

 

இவர், வருவாய்த் துறையில் உள்ள ஊழியர்களின் பாதுகாப்பிலும் அக்கறை செலுத்தினார். இப்படி அனைத்துத் தரப்பு மக்களின் பாராட்டுக்கும்  அன்புக்கும் உரியவராக இருந்த சார் ஆட்சியர் அனுவை  தமிழக அரசு, தலைமைச் செயலகத்தில் உள்ள மரபுகள் துறை துணைச் செயலாளராகப் பதவி உயர்வு அளித்து, பணி மாறுதல் செய்துள்ளது. 

 

கடந்த 12. 6 .2021 அன்று பணி மாறுதல் அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து திண்டிவனம் பழங்குடி இருளர் இன மக்களின் பாதுகாப்பு சங்க ஒருங்கிணைப்பாளர் திண்டிவனம் பேராசிரியர் பிரபா கல்விமணி, வீராணமூர் அருட்தந்தை ரபேல் ராஜ் ஆகியோர் சார் ஆட்சியர் அனுவிற்கு நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தனர். இவர்கள் மட்டுமல்ல மக்கள் பணியில் தங்கள் மீதும் அக்கறை எடுத்துக் கொண்டு சிறப்பாகச் செயல்பட்ட தங்களின் சார் ஆட்சியரை வாழ்த்தி வழியனுப்ப திண்டிவனம் கோட்டத்தில் உள்ள வருவாய்த் துறை அலுவலர்கள், ஊழியர்கள் ஆகியோரும் திரண்டுவந்து சார் ஆட்சியருக்கு வாழ்த்து தெரிவித்து பிரியாவிடை கொடுத்து அனுப்பி உள்ளனர். 

 

இவரது மாறுதல் குறித்து அப்பகுதி மக்கள், “சார் ஆட்சியர் அனு, மீண்டும் எங்கள் விழுப்புரம் மாவட்ட ஆட்சியராகப் பொறுப்பேற்கும் காலம் வரவேண்டும். அப்படி வரும் என்று நம்புகிறோம்” என்கிறார்கள்.
 

 

சார்ந்த செய்திகள்