“ஒன்றிய அரசின் துரோக நடவடிக்கைகளுக்கு எதிராக தொடர்ந்து போராடுவோம்” - சு. வெங்கடேசன்!

Su Venkatesan says We will continue to fight against the treasonous actions of the Unon Govt

தெற்கு இரயில்வேயின் விளக்கம் முடக்கப்பட்ட திட்டங்களை மூடி மறைக்கும் மற்றுமொரு முயற்சியே என சு. வெங்கடேசன் எம்.பி. தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் சமுக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “தமிழ்நாட்டு ரயில் வளர்ச்சி திட்டங்கள் முடக்கப்பட்டது குறித்து தொடர்ந்து குரல் எழுப்பி வந்துள்ளேன். இந்நிலையில் தெற்கு இரயில்வேயின் பொதுமேலாளர் இரயில்வே வாரியத்துக்கு எழுதியுள்ள கடிதத்தின் அடிப்படையில் சில கேள்விகளை எழுப்பி அறிக்கை வெளியிட்டிருந்தேன். நான் வெளியிட்டு அந்த அறிக்கைக்கு தெற்கு ரயில்வே விளக்கம் அளித்துள்ளது. அந்த விளக்கம் திட்டங்கள் குறித்த பொதுவான கொள்கையாகும். நான் எழுப்பியது பொது மேலாளருடைய கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள திட்ட விபரங்கள் சார்ந்தது.

முடக்கப்பட்ட புதிய பாதை ரயில் திட்டங்கள், முடக்கப்பட வேண்டும் என்ற தெற்கு ரயில்வேயின் கோரிக்கை அடங்கிய திட்டங்கள், நிதிநிலை அறிக்கையில் ஏற்கனவே சேர்க்கப்பட்டு இப்பொழுது மீண்டும் சர்வேக்கு மாற்றப்பட்டுள்ள மூன்று இரட்டை பாதை திட்டங்கள் குறித்த விபரங்கள் ஆகும். தெற்கு ரயில்வேயின் பொதுமேலாளர் ரயில்வே வாரியத்திற்கு எழுதிய கடிதத்தில் மேற்குறிப்பிட்ட அம்சங்கள் குறித்து நான் கேள்வி எழுப்பி இருந்தேன். ஆனால் தெற்கு ரயில்வே அதற்கு பதில் சொல்லாமல் திட்டங்கள் குறித்த பொதுவான கொள்கைகளை அறிவித்துள்ளது. ‘நீங்கள் கூறியது தவறு. திட்டங்கள் முடக்கப்படவில்லை’ என்று பதில் கூறியிருந்தால் நான் வரவேற்று இருப்பேன். ஆனால் அதைப் பற்றி எதுவும் கூறாமல் பொதுவான திட்டங்கள் குறித்த கொள்கையை அறிவித்ததன் மூலம் தெற்கு ரயில்வே நிர்வாகம், பிரச்சனையை மூடி மறைக்கவே முயல்கிறது.

எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு தெற்கு இரயில்வே நிர்வாகமும், இரயில்வே அமைச்சரும் பதில் சொல்ல கடமைப்பட்டவர்கள். தமிழ்நாடு புதிய அகல ரயில் பாதை பணிகளின் மொத்த நீளமான 864.5 கி. மீ ல் 571.33 கி.மீ (66%) புதிய ரயில் பாதை திட்டங்களின் நிதி முதல் காலாண்டிலேயே திருப்பி அளிக்க வேண்டிய அவசியம் ஏன் ஏற்பட்டது. சென்னை - கடலூர் மற்றும் ஈரோடு - பழனி ஆகிய ரயில் பாதை திட்டங்கள் நிறுத்தப்படலாம் என தெற்கு ரயில்வே பொது மேலாளர் கடிதம் எழுதியுள்ள நிலையில் இது குறித்து விளக்குவாரா ரயில்வே அமைச்சர். தமிழ்நாட்டின் 47.8% புதிய அகல ரயில் பாதை திட்டங்கள் முடக்கப்படுவது உண்மைதானா என்பதை ரயில்வே அமைச்சர் தெளிவுபடுத்துவாரா?.

நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டு புதிய அகல ரயில் பாதை திட்டங்களுக்கு 617.8 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு 247.8 கோடி மீண்டும் திருப்பி அளிக்கப்பட்டுள்ளது. நிதிநிலை அறிக்கையில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது வெறும் கண்துடைப்பு நாடகம் தானா?. இந்த கேள்விகள் தமிழ்நாட்டின் அடிப்படை வளர்ச்சியோடு சம்பந்தப்பட்டது. எனவே ஒன்றிய அரசின் துரோக நடவடிக்கைகளுக்கு எதிராக தொடர்ந்து போராடுவோம்” எனத் தெரிவித்துள்ளார்.

Southern Railway su venkatesan union govt
இதையும் படியுங்கள்
Subscribe