Su. Venkatesan said Our struggle as people of Melur and Madurai will continue

மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்திற்கு உட்பட்ட அரிட்டாபட்டி உள்ளிட்ட பல கிராமங்களில் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மத்திய அரசு ஏலம் நடத்தியது. இதில் வேதாந்தா குழுமத்தின் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம் ஏலம் எடுத்திருப்பதாக தகவல் வெளியாகியிருந்தது. இதையடுத்து அப்பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எனப் பல்வேறு தரப்பினரும் இந்த சுரங்கம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், டங்ஸ்டன் கணிம சுரங்க திட்டத்தை முற்றிலுமாக ரத்து செய்யக் கோரி மேலூர் பகுதியில் உள்ள விவசாயிகள் இன்று (07-01-25) காலை மேலூரில் இருந்து மதுரை தமுக்கம் தபால் நிலையம் வரை சுமார் 20 கி.மீ தொலைவு தூரம் நடைப்பயணமாக பேரணி நடத்தினர். இதற்கிடையில், விவசாயிகள் தபால் நிலையத்திற்குச் செல்வதை தடுக்கும் விதமாக பேரிகார்டுகளை மதுரை தமுக்கம் மைதானத்தை அமைத்தனர்.

மதுரை தமுக்கம் மைதானத்திற்கு வந்த விவசாயிகள், அங்கு வைத்திருந்த பேரிகார்டுகளை தூக்கி வீசி காவல்துறையினரோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், போலீசாருக்கும், விவசாயிகளுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து, பேரிகார்டுகளை தாண்டி தமுக்கம் பிரதான சாலையில் 2,000க்கும் அதிகமான விவசாயிகள், மேலூர் பகுதி பொதுமக்கள், சூழலியல் ஆர்வலர்கள் உள்ளிட்ட பலரும் தரையில் அமர்ந்து டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்தி வருகின்றனர். ஏற்கெனவே, கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாக இருந்த நிலையில், காவல்துறை அனுமதி மறுத்தது. இதனால், காவல்துறையினரோடு கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டு தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Advertisment

இந்த நிலையில் மதுரை நாடாளுமன்ற எம்.பி. சு.வெங்கடேசன் கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “டங்க்ஸ்டன் சுரங்கம் தோண்ட ஒரு பிடிமண்ணைக்கூட எடுக்க அனுமதிக்க மாட்டோம் என ஒரு மாதத்திற்கு முன்பே ஒன்றிய அமைச்சர் கிஷன் ரெட்டிக்குத் தெரிவித்திருந்தேன். இன்று ஆயிரக்கணக்கான மக்களின் முழக்கமாக அது மாறியுள்ளது. மண்ணையும், மக்களையும் காக்கும் நோக்கில் ஆயிரக்கணக்கான மக்கள் 20 கி.மீட்டருக்கு மேல் நடந்தே வந்து போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். மோடி அரசு திட்டத்தை முழுமையாக ரத்து செய்யும் வரை மேலூர் - மதுரை மக்களாகிய எங்கள் போராட்டம் தொடரும்” எனத் தெரிவித்திருந்தார்.