/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/r-bala-kirishnan-art-1.jpg)
சென்னை தரமணியில் இயங்கி வரும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் தலைவராக ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியான ஆர். பாலகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஒரு புகழ்பெற்ற தமிழ்மொழி அறிஞரும், ஆட்சி பணி வல்லுநரும் ஆவார். தமிழ் இலக்கியத்தில் இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டங்களைப் பெற்ற இவர், தமிழில் குடிமைப்பணித் தேர்வுகளை எழுதி வென்ற முதல் தமிழ் மாணவர். ஆய்வாளர், படைப்பாளர் என்ற இரு தளங்களில் செயல்படும் இவர் 15 நூல்களின் ஆசிரியர் ஆவார். சிந்துவெளிப் பண்பாட்டுத் தொல்லியல் தரவுகளைச் சங்க இலக்கியங்கள் மற்றும் தமிழ்நாட்டு அகழாய்வுத் தரவுகளோடு ஒப்பிட்டு இவர் எழுதியுள்ள ஆங்கிலம் மற்றும் தமிழ் நூல்கள் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளன.
இந்திய ஆட்சிப் பணியில் 1984ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், ஒடிசா அரசிலும் இந்தியத் தேர்தல் ஆணையத்திலும் 34 ஆண்டுகள் சிறப்பாகப் பணியாற்றியவர். ஒடிசா மாநிலத்தின் நிதித்துறைச் செயலர், கூடுதல் தலைமைச் செயலாளர், வளர்ச்சி ஆணையர் போன்ற பொறுப்புகளை வகித்தவர். கடந்த 2018இல் பணி ஓய்வு பெற்ற இவர் அதன்பிறகு ஒடிசா மாநில முன்னாள் முதல்வரின் தலைமை ஆலோசகராக 2024 வரையில் பொறுப்பு வகித்தார். திராவிட மொழிக் குடும்பத்தின் பரவல், சிந்து சமவெளிப் பண்பாடு, தொல் தமிழ்த் தொன்மங்கள், சங்க இலக்கியங்கள் மற்றும் திருக்குறள் குறித்த இவரது செயல்பாடும் பங்களிப்பும் உலகத் தமிழர்களால் பாராட்டப்பட்டுள்ளது.
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் தலைவராக ஆர். பாலகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளது. தமிழ் மொழி மற்றும் பண்பாட்டு ஆய்வுகளுக்கு புதிய உந்துதலை அளிக்கும் எனத் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இவரது நியமனத்திற்குப் பலரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் மதுரை தொகுதி நாடாளுமன்ற மக்களவைத் தொகுதி உறுப்பினர் சு. வெங்கடேசன் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “தனது ஆய்வுகளால் தொல் தமிழர் வரலாறு குறித்தும் பண்பாடு குறித்தும் பல உண்மைகளை வெளிக்கொணர்ந்த ஆர். பாலகிருஷ்ணன் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. அவரது அனுபவமும் அறிவும் தமிழ் மொழி குறித்த ஆய்வுகளுக்கு மேலும் வலுசேர்க்கும். வைகையின் மைந்தனுக்கு வாழ்த்துகள்” எனத் தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)