கீழடி அகழாய்வு; தமிழிசைக்கு சு.வெங்கடேசன் எம்.பி. சரமாரி கேள்வி!

Su. Venkatesan MP questions Tamilisai regarding Keezhadi excavations

மதுரை எம்.பி. சு.வெங்கடேசன், "பல வரலாற்றுச் சித்திரங்களை கீழடி மாற்றியமைத்த பதற்றத்தில்தான் பாஜக அரசு அகழாய்வை ரத்து செய்யப் பார்க்கிறது என குற்றம்சாட்டியிருந்தார். இந்த குற்றச்சாட்டிற்கு பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், “கீழடி அகழாய்வுக்கு நிதி ஒதுக்கியதே மத்திய அரசுதான். நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனே நேரில் வந்து அகழாய்வை பார்வையிட்டார்” என்று பதிலளித்திருந்தார். மேலும், இவ்விவகாரத்தில் சு.வெங்கடேசன் அரசியல் செய்யக் கூடாது என்றும் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் தனது எக்ஸ் பக்கத்தில் விளக்கமளித்துள்ள சு.வெங்கடேசன், “கீழடி ஆய்வுக்கு நிதி ஒதுக்கியதே மத்திய அரசு தான்” என்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை கூறியுள்ளார். அதனால் தான் கேட்கிறோம். முதல் ஆண்டு நிதி ஒதுக்கிவிட்டு அடுத்த ஆண்டு ஏன் நிறுத்தினீர்கள்? ஆய்வில் எதுவும் கிடைக்கவில்லை என்றால் நிதியை நிறுத்துவார்கள். எல்லாம் கிடைத்த போது ஏன் நிறுத்தினீர்கள்? நீங்கள் ஒதுக்கிய நிதி நீங்கள் சொல்லிவரும் வரலாற்றுக்கு எதிரான உண்மையை கண்டறிந்ததால் பதட்டமடைந்து நிதியை நிறுத்தினீர்கள்.

வேதநாகரிகத்துக்கு முந்தையது தமிழர் நாகரிகம் என்ற உண்மையை உங்களால் ஏற்க முடியவில்லை. எனவே நிதியை நிறுத்தினீர்கள். ஆய்வை நிறுத்தினீர்கள்.ஆய்வறிக்கையை எழுதவிடாமல் இடையூறு செய்தீர்கள். அதையும் மீறி ஆய்வறிக்கை சமர்பிக்கப்பட்ட பின்னும் வெளியிடாமல் முடக்க நினைத்தீர்கள். நாடாளுமன்றத்தின் தலையீடு மூலம் வெளியிட முயற்சித்தால் இப்பொழுது “போதிய நம்பகத்தன்மை இல்லை” என்று சொல்லி நிறுத்துகிறீர்கள்.

இது மட்டுமல்ல, இன்னும் எவ்வளவு இடையூறுகள் செய்தாலும் அனைத்தையும் கடந்து தன் வரலாற்றை மெய்பிக்கும் ஆற்றல் கீழடிக்கு உண்டு. ஏனென்றால் அது புராணங்களில் எழுதப்பட்ட கற்பனை நகரமல்ல. இம்மண்ணில் கட்டி எழுப்பப்பட்ட தமிழர்களின் தொல்நகரம். மூவாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முந்தைய தமிழர்களின் தொல் தடங்கள் நீங்கள் நிதியை மறுப்பதன் மூலமோ, ஆய்வை நிறுத்துவதன் மூலமோ மறைந்து விடாது. வெளிப்பட்டுவிட்ட வரலாற்று உண்மைகளுக்கு வெளிச்சம் கூடத்தான் செய்யும். அது தான் அறிவியல்” என்று தெரிவித்துள்ளார்.

keeladi su venkatesan tamilisai
இதையும் படியுங்கள்
Subscribe