Students who were surprised to see the changes achieved in Tamil writing in 2000 years

ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி, சுரேஷ் சுதா அழகன் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மைப் பாதுகாப்பு மன்றத்தின் சார்பில் பழந்தமிழ் கல்வெட்டுகள் பயிலரங்கம் மற்றும் கண்காட்சி நடைபெற்றது. ஒன்பதாம் வகுப்பு மாணவன் ச.ரோகித் அனைவரையும் வரவேற்றார்.

நிகழ்வுக்குத் தலைமை தாங்கிய பள்ளித் தலைமையாசிரியர் மகேந்திரன் கண்ணன் பேசியபோது, “மாணவர்கள் பள்ளியில் பயிலும் காலத்திலேயே தமிழ் மொழியை நன்றாகப் படிக்கவும், எழுதவும் பயிற்சி எடுத்துக் கொள்ளவேண்டும். அதன் வழியாகத் தான் தமிழ் மொழியின் தொன்மையான கல்வெட்டுகளின் சொற்களைப் படிக்க இயலும். அதற்கான ஒரு நல்வாய்ப்பாக இப்பயிலரங்கம் அமைந்துள்ளது” என்றார்.

ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவரும், மன்றச் செயலருமான வே.ராஜகுரு, தமிழ்நாட்டின் வரலாறு எழுத உதவும் அறிவியல்பூர்வமான சான்றாக உள்ள, தமிழி, வட்டெழுத்து, தமிழ், கிரந்தம், அரபி, தேவநாகரி, தெலுங்கு, கன்னடம் ஆகிய கல்வெட்டுகள் பற்றி மாணவர்களுக்கு படங்கள் மூலம் விளக்கினார். ஒன்பதாம் வகுப்பு மாணவி ரா.மதுஜாஸ்ரீ நன்றி கூறினார்.

Advertisment

அண்மையில் ராஜராஜசோழன் பெயர் பொறித்த காசுகளைக் கண்டெடுத்த மாணவிகள் மணிமேகலை, கனிஷ்கா ஸ்ரீ, திவ்யதர்ஷினி ஆகியோரைப் பாராட்டி புத்தகங்கள் பரிசளிக்கப்பட்டன. பின்னர் நடந்த கண்காட்சியில், பார்வைக்கு வைக்கப்பட்டிருந்த தமிழி, வட்டெழுத்து, தமிழ் கல்வெட்டுகளின் மைப்படிகளையும், அதில் எழுதப்பட்டிருந்த கல்வெட்டு எழுத்துகளையும் படித்து 2000 ஆண்டுகளில் படிப்படியாய் தமிழ் எழுத்துகள் அடைந்த மாற்றங்களைக் கண்டு மாணவர்கள் அதிசயித்தனர்.