Skip to main content

அகழாய்வு முறைகளை அறிந்து வியந்த மாணவர்கள்!

Published on 26/02/2024 | Edited on 26/02/2024
Students who were surprised to know the methods of excavation

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி சுரேஷ் சுதா அழகன் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மைப் பாதுகாப்பு மன்றம் சார்பில் “தொல்லியல் அகழாய்வுகள்” என்ற தலைப்பில் கண்காட்சி நடைபெற்றது. 9-ம் வகுப்பு மாணவன் ம.திவாகரன் வரவேற்றார். கண்காட்சியை தலைமையாசிரியர் ரெ.புரூணா ரெத்னகுமாரி திறந்து வைத்தார். 6-ம் வகுப்பு மாணவி மகா நன்றி கூறினார். 

முன்னிலை வகித்த மன்றச் செயலர் வே.ராஜகுரு பேசும்போது, தொல்லியலில் மிக முக்கியமானது அகழாய்வு. இதன் மூலமே பல தொல்லியல் உண்மைகள் கண்டறியப்படுகின்றன. அகழாய்வுகளே வரலாறு உருவாக்கப்படுவதற்கான முதன்மைச் சான்றாக அமைகின்றன. எழுத்துச் சான்றுகள் இல்லாத வரலாற்றுக்கு முற்பட்ட கால மனித வாழ்க்கையை அறிய அவர்கள் வாழ்ந்த இடங்களை தோண்டி, பயன்படுத்திய பழம்பொருள்களைக் கண்டறிந்து அவர்களின் வாழ்க்கை முறையை அறிய முடிகிறது என்றார். 

கண்காட்சியில், பரவலாகத் தோண்டும் வகை, ஆழத்தோண்டும் முறை, சுற்றகழாய்வு, நீள்குழி அகழாய்வு, குகை அகழாய்வு, சவக்குழி அகழாய்வு, நீருக்கடியில் அகழாய்வு போன்ற அகழாய்வு முறைகள், தொல்பொருட்களின் படங்கள், அழகன்குளம், பெரியபட்டினம் பகுதிகளில் மேற்பரப்பாய்வில் கண்டெடுத்த ரௌலட்டெட், அரிட்டைன், சீன பானை ஓடுகள், சங்குகள் போன்றவை காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. 

இதில் அகழாய்வு அறிமுகம் பற்றி செ.முபிக்கா, அகழாய்வு முறைகள் பற்றி மு.சஞ்சிதா, அழகன்குளம் அகழாய்வு பற்றி மா.பிரியதர்ஷினி, தேரிருவேலி அகழாய்வு பற்றி அ.ஐனுன் ரிப்கா, தொண்டி அகழாய்வு பற்றி செ.கனிஷ்காஸ்ரீ, பெரியபட்டினம் அகழாய்வு பற்றி த.பிரியதர்ஷன் ஆகியோர் விளக்கமளித்தனர். கண்காட்சியில் இடம் பெற்ற படங்கள், தொல்பொருட்கள், விளக்கவுரை மூலம் அகழாய்வு முறைகளை அறிந்து மாணவ மாணவியர் வியந்தனர்.

சார்ந்த செய்திகள்