Skip to main content

தலைமை ஆசிரியர் மாணவர்களுக்கு கொடுத்த வேலை; வலுக்கும் கண்டனங்கள்

Published on 12/12/2023 | Edited on 12/12/2023
Students who dangerously cleaned the school water tank; A viral video

சென்னை கொரட்டூரில் பள்ளி மாணவர்கள் பள்ளியின் மேற்பகுதியில் உள்ள நீர் தொட்டியை ஆபத்தான முறையில் நின்றபடி சுத்தம் செய்யும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. வெளியாகியுள்ள அந்த வீடியோவில் மூன்று பள்ளி மாணவர்கள் பள்ளி கட்டடத்தின் மீது உள்ள குடிநீர் தொட்டியில் இறங்கியபடி அதனை சுத்தம் செய்து கொண்டிருந்தனர். மேலே ஒரு மாணவர் நின்று கொண்டிருக்க, தொட்டிக்குள் இறங்கிய மாணவர்கள் இருவர் உள்ளே இருக்கும் நீரை வாலியில் எடுத்துக் கொடுக்க வெளியே ஊற்றும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. அந்த வீடியோவை பதிவு செய்த நபர் 'ஆபத்தான முறையில் மாணவர்களே சுத்தம் செய்து கொண்டிருக்கிறீர்களே யார் உங்களை சுத்தம் செய்யச் சொன்னா' என கேட்க மாணவன் ஒருவன் ஹெச்.எம் சார்தான் என பதிலளித்தான்.

இந்த சம்பவத்திற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'சென்னை கொரட்டூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியின் மேல்நிலை குடிநீர்த் தேக்கத் தொட்டியை அப்பள்ளியில் பயிலும் நான்காம் வகுப்பு மாணவர்கள் சிலர் மிகவும் ஆபத்தான சூழலில் தூய்மைப்படுத்தும் காணொளி சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது. மாடியை ஒட்டி அமைந்துள்ள குடிநீர்த் தொட்டியின் மீது ஏறி எந்த பிடிமானமும் இல்லாமல் சில மாணவர்கள் நின்று கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு மேல் மின்சாரக் கம்பி செல்கிறது. கரணம் தப்பினால் மரணம் என்ற சூழலில் மாணவர்களை குடிநீர்த்  தொட்டியை  தூய்மைப்படுத்தும் பணியில் பள்ளி நிர்வாகம் ஈடுபடுத்தியது கண்டிக்கத்தக்கது. அதற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.

குடிநீர் தொட்டிகள், வகுப்பறைகள், கழிப்பறைகள் ஆகியவற்றை தூய்மைப்படுத்தும் பணியில் மாணவர்களை ஈடுபடுத்துவது மன்னிக்க முடியாத குற்றம் என்பது ஒருபுறமிருக்க, இதற்கான  அடிப்படைக் காரணம் என்ன? என்பதை கண்டறிந்து சரி செய்ய வேண்டியது கட்டாயம் ஆகும். உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் அதிக கட்டிடங்கள் உள்ள நிலையில், அவற்றின் பராமரிப்புக்காக போதிய நிதி அரசால் ஒதுக்கப்படுவதில்லை. அதனால் பல பள்ளிகளில் ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்களே இந்த பணிகளை செய்ய வேண்டியுள்ளது. சில நேரங்களில் மாணவர்கள் மீது இந்தப் பணி திணிக்கப்படுகிறது. பல பள்ளிகளில் ஆசிரியர்கள் தங்களின் சொந்த செலவில் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. இந்த நிலை மாற்றப்பட வேண்டும்.

இப்போதும் கூட மிக்ஜம் புயலில் பாதிக்கப்பட்ட சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களில் உள்ள பள்ளிகளை சீரமைக்க தமிழக அரசு ரூ.1.9 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்துள்ளது. இதைக் கொண்டு ஒரு பள்ளிக்கு அதிகபட்சமாக ரூ.2500 மட்டுமே வழங்க முடியும். பள்ளிக்கூடங்களில் சாய்ந்து விழுந்த ஒரு மரத்தை வெட்டி அகற்றவே ரூ.2500 தேவைப்படும் போது, அதே தொகையைக் கொண்டு ஒட்டுமொத்தப் பள்ளிக்கும் பராமரிப்புப் பணிகளை எவ்வாறு மேற்கொள்ள முடியும்? என்பதை அரசு சிந்திக்க வேண்டும்.

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க  அவை சிறப்பாக பராமரிக்கப்பட வேண்டியது மிகவும்  அவசியம் ஆகும். இதைக் கருத்தில் கொண்டு பள்ளிகளின் பராமரிப்புக்காக  அரசு கூடுதல் தொகையை ஒதுக்கீடு செய்ய வேண்டும். இனிவரும் காலங்களில் பள்ளிகளின் பராமரிப்புப் பணிகளில் மாணவர்கள் ஈடுபடுத்தப்படாமல் இருப்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்' என தெரிவித்துள்ளார்.

சார்ந்த செய்திகள்

Next Story

ரூ. 4 கோடி பறிமுதல் விவகாரம்; சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
Rs. 4 crore confiscation issue; CBCID case registration

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ.4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அப்போது திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில் விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்கு பதில் கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது. அதேசமயம் இந்தப் பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய 3 மூவரும் கொடுத்து அனுப்பியதாக தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் கடந்த 23 ஆம் தேதி (23.04.2024) தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர்.

அப்போது நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன் காவல்துறையில் அளித்த வாக்குமூலத்தில், “தனக்கும் கைப்பற்றப்பட்ட பணத்திற்கும் எவ்வித சம்பந்தமமும் இல்லை. நயினார் நாகேந்திரன் உதவியாளர் மணிகண்டன் 3 நபர்கள் பணம் கொண்டு வருகிறார்கள். எனவே இவர்களின் பாதுகாப்பிற்காக இருவரை அனுப்ப கேட்டுக்கொண்டதால் தான் தன்னிடம் வேலை பார்க்கும் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் என இருவரையும் அனுப்பி வைத்தேன். சென்னையில் 4 ஹோட்டல்களை வாடகைக்கு எடுத்து நடத்தி வருகிறேன். அதில் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் இருவரும் பணியாற்றி வருகின்றனர்” எனத் தெரிவித்துள்ளார். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நயினார் நாகேந்திரன், மணிகண்டனுக்கு காவல் துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டதாக தகவல் வெளியாகி இருந்தது. 

Rs. 4 crore confiscation issue; CBCID case registration

இது குறித்து நயினார் நாகேந்திரன் சென்னை தியாகராயர் நகரில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், “இந்த விவகாரத்தில் முழுக்க முழுக்க என்னை டார்கெட் செய்கின்றனர். இது ஒரு அரசியல் சூழ்ச்சி ஆகும். ரூ.4 கோடியை எங்கேயோ பிடித்துவிட்டு என் பெயரையும் சேர்த்து பயன்படுத்துகின்றனர். தமிழகத்தில் சுமார் 200 கோடிக்கும் மேல் பணம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது குறித்து விசாரிக்கின்றனர். கைப்பற்றப்பட்ட இந்தப் பணத்திற்கும் எனக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை. தாம்பரம் காவல் நிலையத்தில் மே 2 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக உள்ளேன்” எனத் தெரிவித்திருந்தார். இத்தகைய சூழலில் இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக போலீஸ் டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு ஒன்றை பிறப்பித்திருந்தார்.

இத்தகைய சூழலில் தாம்பரம் போலீசார் இந்த வழக்கு தொடர்பான கோப்புகளை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்திற்கு நேற்று (28.04.2024) கொண்டு சென்று ஒப்படைத்தனர். அதாவது பணம் எடுத்துச் சென்ற சூட்கேஸ்கள், 7 பைகள், 3 செல்போன்கள், 15 பேரிடம் பெற வாக்குமூலம் தகவல் அடங்கிய ஆவணங்கள், நயினார் ஹோட்டல் அருகே இருந்த சிசிடிவி காட்சிகள், ரயில் டிக்கெட் பெற நயினார் கையொப்பமிட்ட அவசர கோட்டாவிற்கான படிவம் ஆகியவற்றை தாம்பரம் காவல் நிலைய ஆய்வாளர் பாலமுரளி தலைமையிலான போலீசார் சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைத்தனர். 

Rs. 4 crore confiscation issue; CBCID case registration

இந்நிலையில் இந்த வழக்கு குறித்து சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். முன்னதாக இந்த வழக்கில் சதீஷ், நவீன், பெருமாள் ஆகியோர் மீது 4 பிரிவுகளின் கீழ் தாம்பரம் போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. விரைவில் சிபிசிஐடி போலீசார் விசாரணையை தொடங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Next Story

மருத்துவம் பார்ப்பது போல் வந்து தம்பதியைக் கழுத்தறுத்து படுகொலை; அதிரவைத்த கொடூரச் சம்பவம்!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
Shocking incident on strangled the couple in chennai

ஆவடி அருகே மிட்டனமல்லி காந்தி மெயின் ரோடு இரண்டாவது குறுக்குத் தெரு பகுதியைச் சேர்ந்தவர் சித்த மருத்துவர் சிவன் நாயர். இவர், தனது வீட்டிலேயே மருத்துவம் பார்த்து வந்துள்ளார். இவரது மனைவி பிரசன்னா குமாரி. இவர் மத்திய அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவர். இந்த தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் இருக்கிறார்கள். இவர்களது மகன், இதே பகுதியில் சித்த மருத்துவம் பார்த்து வருகிறார். இவர்களது மகள் வெளிநாட்டில் வேலை செய்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், வழக்கம் போல், இன்று சிவன் நாயர் தனது வீட்டில் சிகிச்சை பார்த்து வந்துள்ளார். அப்போது, சிகிச்சை பார்ப்பது போல வந்த மர்ம நபர்கள் சிவன் நாயர் மற்றும் அவரது மனைவி பிரசன்னா குமாரி ஆகியோரை கழுத்தை அறுத்து கொடூரமாகக் கொலை செய்துவிட்டு தப்பி சென்றுள்ளனர். இது குறித்து அக்கம் பக்கத்தினர் முத்தாபுதுப்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த முத்தாபுதுப்பேட்டை போலீசார், உயிரிழந்த தம்பதியின் உடல்களை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மத்திய அரசு நிறுவனங்கள் அமைந்துள்ள பிரதான பகுதியில் கணவன், மனைவி ஆகியோர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டதை அடுத்து 100 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் கொலை செய்துவிட்டு மர்ம நபர்கள் வீட்டில் இருந்த நகை பணத்தை கொள்ளை அடித்து சென்றுள்ளனரா? என்றும், குடும்ப தகராறு காரணமாக கொலை நடத்தப்பட்டு இருக்குமா? என்ற கோணங்களிலும் முத்தாபுதுப்பேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆவடி காவல் ஆணையரக பகுதிகளில் தொடர்ந்து நடைபெற்று வரும் கொலை, கொள்ளை சம்பவத்தால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். இந்தப் பகுதியில், எங்கும் சி.சி.டி.வி கேமராக்கள் இல்லாததால் குற்றவாளிகளைப் பிடிக்க போலீசாருக்கு சவாலாக உள்ளது எனக் கூறப்படுகிறது. ஆவடியில் கணவன் மனைவி கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.