நீண்ட கால விடுமுறைக்குப் பிறகு உற்சாகமாகப் பள்ளிக்கு வந்த மாணவர்கள்!

Students who came to school excitedly!

தமிழகத்தில் கரோனா தொற்று பாதிப்பு குறைந்த பின், ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. அந்தவகையில் கடந்த செப்டம்பர் மாதம், 9 முதல் 12ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டன.

இதைத்தொடர்ந்து 1 முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேற்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்டன. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கனமழை காரணமாக, நேற்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. அதனால் இன்று கள்ளக்குறிச்சி மாவட்டம் திருநாவலூர் அரசினர் மேல்நிலைப் பள்ளியில், 6 முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கியது.

பள்ளிக்கு வந்த மாணவர்களைப் பள்ளியின் தலைமை ஆசிரியை இளங்கோதை தலைமையில் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு ரோஜாப்பூ, சாக்லேட் கொடுத்து கைகளைத் தட்டி இன்முகத்தோடு வரவேற்றனர். நீண்ட இடைவெளிக்குப் பிறகு பள்ளிக்கு வந்த மாணவர்கள் மிகவும் மகிழ்ச்சியாகவும், உற்சாகமாகவும் இருந்தனர்.

சக மாணவர்கள் மற்றும் நண்பர்களைப் பார்த்து நலம் விசாரித்து, அன்பைப் பரிமாறிக் கொண்டனர். மேலும் பள்ளிக்கு வந்த மாணவர்களுக்குப் பாடப்புத்தகங்கள், நோட்டுகள், ஜாமட்டரி பாக்ஸ், சீருடைகள், புத்தகப்பை, ஷூ, சாக்ஸ் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டன. முன்னதாக மாணவர்களுக்கு உடல் வெப்பநிலையைப் பரிசோதனை செய்து, கைகளைச் சுத்தம் செய்யக் கிருமிநாசினி, முகக்கவசம் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வில் பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர்கள் அருள்மணி, சத்தியமூர்த்தி, முதுகலை ஆசிரியர்கள் ராஜசேகரன், சண்முகம், பட்டதாரி ஆசிரியர்கள் பாத்திமா பேகம், கலைச்செல்வி, தேன்மொழி, வாசுதேவன், நாகராஜ், விஜயராணி, மீனாட்சி, உடற்கல்வி ஆசிரியர் அன்பு சோழன் உள்ளிட்ட ஆசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

govt school kallakuruchi tn govt
இதையும் படியுங்கள்
Subscribe