Skip to main content

பள்ளி விடுதியில் சமையல்காரர்களாக மாறிய மாணவர்கள்; 'போதை' ஊழியரால் பட்டினி கிடந்த அவலம்!

Published on 29/01/2020 | Edited on 29/01/2020

கிருஷ்ணகிரி அருகே, குடிபோதையில் படுத்துவிட்ட விடுதி சமையலரால் அரசுப்பள்ளி மாணவர்கள் பட்டினி கிடந்த அவலம் நேர்ந்துள்ளது.


கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள சிங்காரப்பேட்டையில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இதன் அருகில், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் கீழ் ஒரு மாணவர் விடுதியும் உள்ளது. இதில், ஐம்பதுக்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் தங்கி, படித்து வருகின்றனர். இந்த விடுதியின் காப்பாளராக சரவணன் (36) என்பவர் உள்ளார். சூளகிரியைச் சேர்ந்த முனிராஜ் (42), அமிர்தலிங்கம் ஆகிய இருவரும் சமையலர்களாக பணியாற்றி வருகிறார்கள். 

Students who became chefs at the school cafeteria


இரு சமையலர்களில் ஒருவரான அமிர்தலிங்கம், விடுப்பில் சொந்த ஊருக்குச் சென்று விட்டார். முனிராஜ் மட்டும் பணியில் இருந்தார். அவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருக்கிறது. கடந்த திங்கள் கிழமை (ஜன. 27), வழக்கம்போல் மது குடித்துவிட்டு போதை தலைக்கேறிய நிலையில், விடுதி அறையிலேயே பாய், தலையணை போட்டு படுத்து அயர்ந்து தூங்கிவிட்டார்.


மதிய உணவு இடைவேளையின்போது மாணவர்கள் பசியோடு வந்து பார்த்தபோது, முனிராஜ் போதையில் படுத்துக் கிடப்பதும், தங்களுக்கு உணவு சமைக்காமல் பட்டினி போட்டிருப்பதைக் கண்டும் விரக்தி அடைந்தனர். அவரை பலமுறை எழுப்ப முயன்றும் எழுந்திருக்க முடியவில்லை. பசியால் தவித்த மாணவர்கள், அவர்களாகவே தங்களுக்குத் தெரிந்த வகையில் சமைத்து, அப்போதைக்கு பசியாறினர். இதனால் பள்ளிக்குச் செல்வதில் தாமதம் ஆனது. 


வகுப்பறைக்கு தாமதமாக வந்த மாணவர்களிடம் ஆசியர்கள் விசாரித்தபோதுதான், மேற்கண்ட விவரங்கள் தெரிய வந்தன. இதுபற்றி விடுதி காப்பாளருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, விடுப்பில் சென்றிருந்த சமையலர் அமிர்தலிங்கத்தை உடனடியாக பணிக்கு வரவழைத்தனர். அவர் வந்ததை அடுத்து, நேற்று வழக்கம்போல் விடுதியில் உணவு சமைத்து மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. 


பணி நேரத்தில், பொறுப்பின்றி குடிபோதையில் இருந்ததோடு, மாணவர்களை பட்டினி போட்ட சமையலர் முனிராஜ் மீது துறை ரீதியான நடவடிக்கைக்கு பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது.
 

சார்ந்த செய்திகள்

Next Story

பட்டப்பகலில் ஒருவர் பெட்ரோல் ஊற்றி எரிப்பு; போலீசார் விசாரணை

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
In broad daylight, someone poured petrol and set it on fire; Police investigation

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பட்டப்பகலில் சித்தப்பா மீது மகனே பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் அடுத்து உள்ள சவரக்கோட்டை பிரிவு பகுதியில் வசித்து வருபவர் வடமலை. அவருடைய மகன்கள் சின்னவன் மற்றும் மணி. மணியின் மகன் செந்தில். கடந்த நான்கு நாட்களுக்கு முன்னதாக செந்தில் அவருடைய விவசாய நிலத்தில் அறுவடை பணிக்காக டிராக்டரில் சென்றுள்ளார். அப்பொழுது சித்தப்பா சின்னவன் மற்றும் செந்தில் ஆகியோருக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இது தொடர் பிரச்சனையாக இருந்து வந்த நிலையில் இருதரப்பினரும் காவேரிப்பட்டினம் போலீசாரிடம் புகார் அளித்தனர். போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் சித்தப்பா சின்னவன் தீவனக்கடை ஒன்றில் இருந்த பொழுது கடைக்குச் சென்ற செந்தில் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை அவர் மீது ஊற்றி பற்ற வைத்தார்.

இதில் உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்த சின்னவனை அங்கிருந்தவர்கள் நேற்று தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பட்டப்பகலில் ஒருவர் மீது பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட சம்பவம் கிருஷ்ணகிரியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Next Story

17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த போர் வீரனின் நடுகல் கண்டுபிடிப்பு!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
17th century warrior headstone Kantipudi

சேலம் மாவட்டம், மாதநாயக்கன்பட்டி பெருந்தலைவர் காமராசர் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் தலைவர் தலைமை ஆசிரியர், பொறுப்பு ஆசிரியர்களாக அன்பரசி, விஜயகுமார் ஆகியோர் உள்ளனர். இப்பள்ளி மாணவர்கள் கொடுத்த தகவலின்படி ஆசிரியர்களும், மாணவர்களும் களப்பயணத்தின் போது வீரனின்  நடுகல்  ஒன்று கண்டறியப்பட்டது.

பொது ஆண்டு 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த நடுகல்லில் எழுத்துகள் எதுவும் இல்லை. கல்பூமியின் மேற்பரப்பில் 2 அடி உயரமும் 1.5  அடி அகலம் கொண்டது. இந்த நடுகல்லை சுற்றி கல்திட்டை போன்ற அமைப்பும் உள்ளது . நடுகல்லில் போர் வீரனின் சிற்பம்  உள்ளது.
வேட்டைக்கு சென்று இறந்ததற்காக எடுக்கப்பட்ட நடுகல்லாக இருக்கலாம். ஆலிடாசனம் நிலையில் வில்லில் நாணில் அம்பு எய்துவது போன்றும், இடுப்பில் குரு வாளும், காதில் பத்ர குண்டலமும்,   கழுத்தில் சரப்பளி, சவுடி, முத்தாரம் அணிகலன் அணிந்திருப்பது  போன்றும் கையில் தோள்வளை  இருப்பது போன்ற உருவமைப்பு உள்ளது.

17th century warrior headstone Kantipudi

இப்பகுதி தாருகாவனத்திற்க்கு அருகில் இருப்பதால்  இந்த வீரன் வேட்டுவ தலைவனாக இருக்கலாம். இந்த நடுகல் எல்லாம் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் வைக்கப்பட்டதாகும்.  தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் சார்பாக தொல்லியல் சார்ந்த வரலாற்று தகவல்களையும், அதனை பற்றிய விழிப்புணர்வையும் இன்றை இளைய தலைமுறை மாணவர்களுக்கு கொண்டு சேர்ப்பது தான் தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் நோக்கமாகும் என்கின்றனர் தொன்மை பாதுகாப்பு மன்ற ஆசிரியர்கள்.