
தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் அரசு அரசு தேர்வுகள் 10, 11, 12 ஆகிய வகுப்புகளுக்கு நடைபெற்று அதற்கான முடிவுகளும் வெளியிடப்பட்டுள்ளது. அதில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள், மாற்று சான்றிதழ்களை பெற்று அடுத்தபடியாக உயர்கல்விக்கு செல்லும் வகையில் பல்வேறு கட்ட நகர்வில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு முக்கிய தேவையாக உள்ள வருவாய் துறை மூலம் வழங்கப்படும் ஜாதி, வருமானம், இருப்பிட சான்றிதழ்கள் பெற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனையொட்டி தேர்வு முடிவுகள் வருவதற்கு முன்பிலிருந்து இந்த பணிகளில், மாணவ மாணவிகள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் அரசு இ-சேவை மையம் மற்றும் தனியார் அங்கீகாரம் பெற்ற மையங்களில் சான்றிதழ்களை பெறுவதற்காக நாள்தோறும் குவிந்து வருகின்றனர்.
இந்த நிலையில் கடலூர் மாவட்டம் சிதம்பரம், காட்டுமன்னார்குடி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள வட்டாட்சியர் அலுவலகங்களில் செயல்படும் அரசின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள இ சேவை மையங்களில், கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக இ சேவை மையங்களில் சர்வர் மிகவும் மோசமான நிலையில் செயல்படுகிறது. இதனால், மாணவ மாணவிகள் குறித்த நேரத்தில் சான்றிதழ்களை பெற முடியாத சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது. இதனால் இவர்கள் கல்லூரிகளில் சேர்வதற்கு காலதாமதம் ஏற்படுவதோடு விண்ணப்பிப்பதற்கும் சிரமம் அடைந்து வருகிறார்கள். எனவே தமிழக அரசு உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.