
'டிஜிட்டல் பயிர் சர்வே பணிகளில் வருவாய்த்துறை அதிகாரிகளை ஈடுபடுத்துவதற்கு பதிலாக வேளாண் கல்லூரி மாணவ, மாணவியர் ஈடுபடுத்தப்படுவதை பாமக கடுமையாக எதிர்கிறது' என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து அவர் கடந்த 15/11/2024 ஆம் தேதி வெளியிட்டிருந்த அறிக்கையில் 'திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே டிஜிட்டல் பயிர் சர்வே பணியில் ஈடுபட்டிருந்த வேளாண் மாணவர்களும், அதிகாரிகளும் கணக்கெடுப்புக்காக அங்கு சட்டவிரோதமாக நடத்தப்பட்டு வரும் கல்குவாரிக்கு அருகில் உள்ள நிலத்திற்கு சென்ற போது, அங்கிருந்த குண்டர்களால் சுற்றி வளைத்துத் தாக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து பல மணி நேரம் சிறைவைக்கப்பட்ட அவர்கள் பின்னர் அதிகாரிகளின் தலையீட்டால் மீட்கப்பட்டுள்ளனர். வேளாண் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் கண்டிக்கத்தக்கது. டிஜிட்டல் பயிர் சர்வே பணிகளில் வருவாய்த்துறை அதிகாரிகளை ஈடுபடுத்துவதற்கு பதிலாக வேளாண் கல்லூரி மாணவ, மாணவியர் ஈடுபடுத்தப்படுவதை தொடக்க நிலையிலேயே நாங்கள் கடுமையாக எதிர்த்தது.
டிஜிட்டல் பயிர் சர்வே பணிகள் மத்திய அரசால் ஒதுக்கப்படும் நிதியைக் கொண்டு தனியார் நிறுவனங்கள் மூலமாகவோ, கிராம நிர்வாக அலுவலர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குவதன் மூலமாகவோ தான் மேற்கொள்ளப்பட வேண்டும். ஆபத்தான சூழலில் வேளாண் மாணவர்களை இந்தப் பணியில் ஈடுபடுத்துவது தேவையற்ற பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும். எனவே, டிஜிட்டல் பயிர் சர்வே பணிகளில் இருந்து மாணவர்களை அரசு விடுவிக்க வேண்டும்' என வலியுறுத்தி இருந்தார்.

இந்நிலையில் இதற்கு வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர் செல்வம் விளக்கமளித்துள்ளார். செய்தியாளர்களைச் சந்தித்த அவர் இதுதொடர்பாக பேசுகையில், ''டிஜிட்டல் சர்வீவேவைபொறுத்தவரை என்னென்ன பயிர்கள் என்ற அடங்கல் செய்ய வேண்டும். அதை செய்யவில்லை என்றால் பின் விளைவுகள் ஏற்படும். ஒன்றிய அரசினுடைய நிதி ஆதாரங்கள் நிறுத்தப்பட கூடிய சூழ்நிலை இருக்கிறது. காரணம் ஒன்றிய அரசு கேட்கக் கூடிய தகுந்து தரவுகளை கொடுக்க வேண்டும். அதற்கு டிஜிட்டல் சர்வே முக்கியம்.
குறிப்பாக வேளாண் மாணவர்களை டிஜிட்டல் சர்வே எடுக்க வைப்பது அவர்களுக்கு பயிற்சியை கொடுக்கும். ஒரு அனுபவத்தை கொடுக்கும். விவசாய படிப்புகளை தொடரும் மாணவர்கள் பீல்டுக்கு சென்று என்னென்ன பயிர்கள் உள்ளது என களத்தில் இருந்து ஆய்வு செய்வார்கள். அதனால் அவர்களுக்கும் இது ஒரு பிராக்டீஸ் ஆக இருக்கும். இதற்கு மாணவர்களும் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. வீணாக அரசியல் செய்ய வேண்டும் என அரசியல் கட்சிகள் சிலர் தவறாக சித்தரித்து வருகிறார்கள். மாணவர்களால் 87 சதவீத டிஜிட்டல் சர்வே பணியில் முடிந்திருக்கிறது'' என்றார்.