விருதுநகர் மாவட்டம் சிவகாசியை அடுத்துள்ள திருத்தங்கல்லில் சீ.ரா. அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு சண்முகசுந்தரம் என்பவர் அறிவியல் ஆசிரியராகப் பணிபுரிகிறார். 12ஆம் வகுப்பு மாணவர்கள் 4 பேர் மது போதையில் பள்ளிக்கு வந்துள்ளனர். அவர்களை ஆசிரியர் சண்முகசுந்தரம் கண்டித்திருக்கிறார். உடனே அந்த மாணவர்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த மது பாட்டிலால் ஆத்திரத்துடன் ஆசிரியர் சண்முகசுந்தரத்தைத் தாக்கியிருக்கின்றனர். இதனால் தலை மற்றும் கழுத்துப் பகுதியில் பலத்த வெட்டுக் காயம் ஏற்பட்ட நிலையில், ஆசிரியர் சண்முகசுந்தரத்திற்கு திருத்தங்கல் அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டது.
அவரை மேல் சிகிச்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இச்சம்பவம் குறித்துக் கேள்விப்பட்ட டி.எஸ்.பி. பாஸ்கர் உள்ளிட்ட காவல்துறையினர், சீ.ரா. அரசு மேல்நிலைப்பள்ளியில் விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில், சம்பவத்தில் ஈடுபட்ட மாணவர்கள் 11ஆம் வகுப்பு படித்தபோது மதிப்பெண் குறைவாக எடுத்ததால் 12ஆம் வகுப்பில் நன்றாகப் படிக்க வேண்டும் என்று ஆசிரியர் சண்முகசுந்தரம் வலியுறுத்தியிருக்கிறார். அந்த முன்விரோதத்தில் மாணவர்கள் ஆசிரியரைத் தாக்கியுள்ளனர். ஆசிரியர் சண்முகசுந்தரத்தைத் தாக்கிய மாணவர்களிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த 2023 டிசம்பர் 8ஆம் தேதி இதே சீ.ரா. அரசு மேல்நிலைப்பள்ளியில் பொருளியல் ஆசிரியர் கடற்கரையை ‘எங்களைப் படிக்கச் சொல்வதற்கு நீங்கள் யார்?” என ஒருமையில் மரியாதைக் குறைவாகக் கேட்டு 11ஆம் வகுப்பு மாணவர்கள் அரிவாளால் வெட்டினார்கள். ஆசிரியர்கள் கையில் பிரம்பு இல்லை; மாணவர்கள் கையில் அரிவாள், மதுபாட்டில் எல்லாம் இருக்கிறது. இன்றைய மாணவர்களில் சிலர் போதைக் கலாச்சாரத்தில் மூழ்கி, வன்முறையைக் கையில் எடுத்திருப்பது கொடுமையானது.