100 சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளி; வகுப்பறை இல்லாமல் மாணவர்கள் தவிப்பு

Students suffer without a classroom building government school Vellore

வேலூர் மாவட்டம், அணைக்கட்டு ஒன்றியத்திற்கு உட்பட்ட பீஞ்சமந்தை, பலாம்பட்டு, ஜார்த்தான் கொல்லை ஆகிய மலை ஊராட்சிகளில் சுமார் 84-க்கும் மேற்பட்ட மலை குக்கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் 35-ஆயிரத்துக்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர்.

பீஞ்சமந்தை மலை வாழ் மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு பீஞ்சமந்தையில் அரசு உயர்நிலைப்பள்ளி தொடங்கப்பட்டது. இந்தப் பள்ளியில் மாணவர்கள் படிப்பதற்கு போதிய வகுப்புக் கட்டிடங்கள் இல்லை என்பதால், தற்போது 3 வகுப்பறை கட்டிடங்கள் மட்டுமே உள்ளது. இங்கு 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை மொத்தம் 280 மாணவர்கள் படிக்கின்றனர். இவர்களுக்குப் பாடம் நடத்த தலைமை ஆசிரியர் உட்பட 6 ஆசிரியர்கள் உள்ளனர். போதிய வகுப்பறைக் கட்டிடங்கள் இல்லாததால் ஒவ்வொரு வகுப்பறைகளிலும், 2 வகுப்பு மாணவர்களை அமர வைத்து ஆசிரியர்கள் பாடம் நடத்துகின்றனர்.

சில சமயங்களில் ஆசிரியர்கள் மாணவர்களை வெராண்டா பகுதியில் அமர வைத்தும், மாடிப் படிக்கட்டில் அமர வைத்தும் பாடம் நடத்தும் அவல நிலை நீடித்து வருகிறது. சாலை, போக்குவரத்து வசதி இல்லாமல் பல கிலோமீட்டர் நடந்து வந்து கடந்த ஆண்டு 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் மலைவாழ் மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றிருப்பது மிகவும் பாராட்டக் கூடியது. இந்த மலைக் கிராம அரசுப் பள்ளியில் போதிய கட்டிட வசதிகள் இல்லை என்பது மிகவும் வேதனைக்குரியதாக இருப்பதாக அப்பகுதி மக்கள்கூறிவருகின்றனர்.

Students suffer without a classroom building government school Vellore

மேலும் மழைக்காலங்களில் மாணவர்களை ஆசிரியர்கள் இந்த 2 வகுப்பறை கட்டிடங்களிலேயே இறுக்கமாக உரசியபடி அமர வைக்கின்றனர். இடித்துக் கொண்டு உட்காரும் மாணவர்கள் அந்த நேரத்தில் படிக்கக் கூட முடியாமல் மிகவும் சிரமப்படுகின்றனர். மழைக்காலங்களில் மாணவர்கள் கலந்து உட்கார்ந்து இருப்பதால் யாருக்கு என்ன படம் நடத்துவது எனத்தெரியாமல் ஆசிரியர்கள் தவிக்கின்றனர். இதில் அதிகம் பாதிக்கப்படுவது பொதுத்தேர்வு எழுத இருக்கும் 10-ம் வகுப்பு மாணவர்களே.

பொதுத்தேர்வுக்கு மாணவர்கள் தயாராகும் நிலையில், அவர்களைத்தனியறையில் அமர வைத்து பாட நடத்தும் சூழல் இல்லை. இதனால், ஆசிரியர்கள் மாடிக்குச் செல்லும் படிக்கட்டில் அமர வைத்துப் பாடம் நடத்தி வருகின்றனர். மேலும் இந்தப் பள்ளியில் விளையாட்டுத்திடல், ஆய்வகம், நூலகம் உள்ளிட்ட வசதிகளும் இல்லாமல் தவித்து வருகின்றனர். எனவே மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு இங்கு போதிய வகுப்பறைக் கட்டிடங்களையும், விளையாட்டுத்திடல்களையும் ஏற்படுத்தித்தர அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மலைவாழ் மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

students Vellore
இதையும் படியுங்கள்
Subscribe