
தமிழ்நாட்டில் சமீப காலமாக பள்ளிகளில் பாலியல் தொல்லை ஆசிரியர் கைது என்ற செய்தி தினசரி பரபரப்பாக வெளிவந்து கொண்டிருக்கிறது. பொதுமக்களிடம் இது பேசு பொருளாகவும் உள்ள நிலையில் எதிர்கட்சிகள் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டதாக கூறி போராட்டங்களையும் முன்னெடுத்துள்ளனர். தற்போது இது போன்ற பாலியல் தொல்லை புகார்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது பெற்றோர்களை அச்சமடைய வைத்துள்ளது.
இந்த நிலையில் திருமயம் சட்டமன்றத் தொகுதியில் உள்ள ஒரு அரசு உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவிகள் சிலர் 1098க்கு தொடர்பு கொண்டு, “எங்கள் பள்ளியில் பொறுப்பு தலைமை ஆசிரியர் பெருமாள்(58) எங்கள் தாத்த வயதில் இருந்துகொண்டு எங்களுக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வருகிறார். பொதுத்தேர்வு எழுத வேண்டிய நாங்கள் தற்போது மன உளைச்சலில் இருக்கிறோம்” என்று புகார் கூறியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து விரைந்து வந்த குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்களும் மாவட்ட கல்வி அலுவலர்களும் சம்பந்தப்பட்ட பள்ளிக்குச் சென்று மொத்த மாணவிகளிடம் தனித்தனியே நீண்ட நேரம் விசாரணை நடத்தினர். 7 மாணவிகளின் வாக்குமூலத்தின் அடிப்படையில் திருமயம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இந்த புகாரின் பேரில் பெபாறுப்பு தலைமை ஆசிரியர் பெருமாள் நேற்று முன்தினம் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

இந்த நிலையில் தலைமையாசிரியர் பெருமாளுக்கு ஆதரவாக இன்று வியாழக்கிழமை காலை பள்ளிக்கு வந்த மாணவ, மாணவிகள், அவர்களது பெற்றோர்கள் மற்றும் கிராமத்தினர் என நூற்றுக் கணக்கானோர் அரிமளம் - கே.புதுப்பட்டி சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் போது, “எங்கள் பள்ளி பொறுப்பு தலைமை ஆசிரியர் மீது பொய் வழக்கு போடப்பட்டுள்ளது. அவரை உடனே விடுதலை செய்ய வேண்டும். பள்ளிக்கு சரியாக வராமல் இருந்த ஆசிரியரை தலைமை ஆசிரியர் (பொ) பெருமாள் கேள்வி கேட்டதால் உன்னை பழிவாங்குவேன் என்று சொல்லி மாணவிகளை பொய் புகார் கொடுக்க தூண்டிய ஆசிரியர் மீது நடவடிக்கை எடு..” என்று வலியுறுத்தி வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து போராட்டம் நடத்தியவர்களிடம் போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டவில்லை. அதனால் தலைமை ஆசிரியர் மீதான புகாரை ரத்து செய்யும் வரை போராட்டம் தொடரும் என்று தெரிவித்துள்ளனர்.