Skip to main content

கொலை குற்றவாளியை கைது செய்யக் கோரி மாணவர்கள் மறியல்! 

Published on 07/04/2022 | Edited on 07/04/2022

 

Students struggle to arrest criminal

 

திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சியை அடுத்த கஞ்சநாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ராமலிங்கம். இவர் அந்தக் கிராமத்தின் அருகில் உள்ள செட்டியபட்டி கிராமத்தைச் சேர்ந்த வெள்ளையம்மாள் என்பவரிடம் கடன் பெற்றதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக 2 பேருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டதாகவும், அதனையடுத்து ராமலிங்கத்தின் டூவீலரை வெள்ளையம்மாள் எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது. 


இதற்கிடையில் கடந்த 21ம் தேதி அந்த டூவீலரை ராமலிங்கத்தின் மகன் கிருஷ்ணன்(15) கேட்க சென்றுள்ளார். அப்போது, வெள்ளையம்மாளுடன் இருந்த பச்சமுத்து என்பவர் அரிவாளால் கிருஷ்ணணை வெட்டியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த மாணவன் கிருஷ்ணன், திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.  இந்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இது குறித்து துவரங்குறிச்சி போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து பச்சமுத்துவை கைது செய்தனர். ஆனால், வெள்ளையம்மாள் கைது செய்யப்படவில்லை. 


ஆத்திரமடைந்த கிருஷ்ணனுடன் படித்த பள்ளி மாணவர்கள் சம்பந்தப்பட்ட பெண்ணை கைது செய்யக் கோரியும், கொலைக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரியும் கஞ்சநாயக்கன்பட்டியில் உள்ள செந்துறை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த துவரங்குறிச்சி போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படாததை தொடர்ந்து மறியல் போராட்டம் நீடித்தது. 


இதற்கிடையே வெள்ளையம்மாள் சிவகங்கை மாவட்டம், எஸ்.புதூரில் பதுங்கி இருந்த தகவல் துவரங்குறிச்சி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் அங்கு விரைந்து சென்ற போலீசார் நேற்று இரவு வெள்ளையம்மாளை கைது செய்தனர். இதனையடுத்து கைது செய்யப்பட்ட வெள்ளையம்மாளை வீடியோ காலில் போலீசார் காட்டியதால் மாணவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனையடுத்து 4 மணி நேர போராட்டம் முடிவுக்கு வந்தது. மாணவர்கள் மறியலில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

 

 

சார்ந்த செய்திகள்