publive-image

"ஏழை மக்கள் கல்வியால் மட்டுமே முன்னேற முடியும்" என்று சிதம்பரத்தில் கடந்த 100 ஆண்டுகளுக்கு முன் போதித்த கல்விதந்தை சுவாமி சகஜானந்தா, அனைத்து சமூக மக்களும் கல்வி கற்கும் வகையில் கல்வி நிறுவனங்களை நிறுவினார். இதில் கல்வி பயின்ற பல ஆயிரக்கணக்காண மாணவர்கள் உலகின் பல்வேறு பகுதிகளில் தனியார் மற்றும் அரசு துறையில் உயர் பதவிகளில் பணியாற்றி வருகிறார்கள். இவர் 35 ஆண்டுகள் சட்டமன்றம் மற்றும் சட்ட மேலவை உறுப்பினராக பணியாற்றி பல்வேறு சமூக பணிகளை செய்துள்ளனர். இவரின் கல்வி சேவையை போற்றும் வகையில் தமிழக அரசு இவர் நிறுவிய நந்தனார் ஆண்கள் பள்ளி அருகே மணிமண்டபம் கட்டியுள்ளது.

Advertisment

இந்நிலையில் அவர் நிறுவிய பள்ளியில் கடந்த 1979-86 ஆம் ஆண்டில் கல்வி பயின்ற மாணவர்கள் முகமதுபஷிர், ரவி, பாண்டியன், கௌதமன் ஆகிய 4 பேரும், அவர்களுடன் அப்போது கல்வி பயின்ற மாணவர்கள் 43 பேரை ஒருங்கிணைத்து ரூ 5 லட்சம் செலவில் பள்ளி வளாகத்திலேயே சுவாமி சகஜானந்தா திருவுருவசிலையை நிறுவினர். மேலும், திருவுருவச்சிலைக்கு செல்லும் நடைபாதையை கட்டமைத்தது, மின்விளக்குகள், பூச்செடிகளை கொண்டு அழகிய உட்புற தோட்டம் உருவாக்கி பள்ளிக்கு அழகிய சூழலை உறுவாக்கினர்.

இதன் பணிகள் முடிந்து ஜூன் 30-ந்தேதி பள்ளி மாணவர்களின் பயன்பாட்டுக்கு அப்பகுதியை திறக்கும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. பள்ளியின் முன்னாள் மாணவர் ரவி தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக சிதம்பரம் சார் ஆட்சியர் மதுபாலன் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி புதியதாக கட்டிய திருவுருவசிலை வளாகத்தை ரிப்பன் வெட்டி சிலைக்கு மாலை அணிவித்தார். பின்னர் அவர் பேசுகையில், “சுவாமி சகஜானந்தா சாதி, மதத்திற்காக சமரசம் ஆகாதவர். அவர் எதையும் துணிந்து செய்யகூடியவர். அவர் நிறுவிய பள்ளியில் பயின்ற மாணவர் இது போன்று செய்வது பாராட்டுக்குறியது. அதே நேரத்தில் இங்குள்ள விளையாட்டு மைதானம் மிக பெரியது. அதனை முன்னாள் மாணவர்கள் கவனத்தில் கொண்டு விளையாட்டில் மாணவர்களை தனிதன்மையுடன் உருவாக்க வேண்டும்" என வேண்டுகோள் விடுத்தார். மேலும், "இந்த பள்ளியில் பயிலும் மாணவர்கள் சுவாமியின் கனவை நனவாக்க நன்கு கல்வி பயின்று நல்லநிலைக்கு செல்லவேண்டும்” என்றார். இதற்கு அனைவரும் கைதட்டி வரவேற்றனர்.

Advertisment

இந்நிகழ்ச்சியில் முன்னாள் ஆசிரியர்கள் கௌரவிக்கப்பட்டார்கள். நிகழ்ச்சியில் சிதம்பரம் கல்வி மாவட்ட அலுவலர் திருமுருகன், நான்முனிசிபல் ஊராட்சி தலைவர் பத்மசுந்தரி, ஒன்றியக்குழு உறுப்பினர் பாலமுருகன் முன்னாள் ஆசிரியர்கள் அம்பிகாபதி, ஜெயராமன், பன்னீர்செல்வம், வெள்ளையன் உள்ளிட்டோர் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.