Advertisment

நீட்டிற்காக மாணவர்கள் இனியும் உயிரை மாய்த்து கொள்ளக்கூடாது- ஸ்டாலின்

தமிழகத்தில் நீட் தேர்விற்கு எதிர்ப்புகள் வலுத்துவந்த நிலையில் அனிதா,பிரதீபா தற்போது சுபஸ்ரீ என நீட் தேர்வு தோல்வியால் நடந்துவரும் மாணவர்களின் தற்கொலை பட்டியல் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதனால் தமிழகத்தில் நீட்டுக்கு விலக்கு வேண்டுமென்ற கோரிக்கைளையும்தற்கொலை செய்துகொண்ட மாணவர்களுக்கான இரங்கல்களையும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் முன்வைத்து வருகின்றனர். இதை தொடர்ந்து திமுக செயல் தலைவர் முக.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,

Advertisment

நீட் தேர்வில் தேர்ச்சியடைய முடியாத வேதனையில் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த சுபஸ்ரீ என்ற மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தேன். மாணவியின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலையும், அவரது பெற்றோருக்கு என் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். திருச்சி தெற்கு மாவட்டக் கழகச் செயலாளரும் - முன்னாள் அமைச்சருமான கே.என்.நேரு, எம்.எல்.ஏ., அவர்களை உடனடியாக மாணவியின் இல்லத்திற்குச் சென்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆறுதல் கூற அறிவுறுத்தியிருக்கிறேன்.

Advertisment

mk stalin

எதிர்கால கனவுகளுடன் மேற்படிப்பிற்கு செல்ல வேண்டிய பருவத்தில் மத்திய பா.ஜ.க. அரசு பிடிவாதமாகக் கொண்டு வந்த நீட் தேர்வால் கிராமப்புற மாணவர்கள் மற்றும் நகர்ப்புற மாணவர்களின் மருத்துவர் கனவு சிதைக்கப்பட்டிருப்பதோடு தேர்வு எழுதுவதற்கு மையங்கள ஒதுக்கிய போது பெற்றோரின் உயிரும், தேர்வு முடிவுகள் வெளிவந்த பிறகு மாணவ-மாணவிகளின் உயிர்களும் அநியாயமாக பறிபோய்க் கொண்டிருப்பது நெஞ்சைப் பதற வைக்கிறது. “தமிழகத்திற்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டும்” என்று சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு இன்றுவரை குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற முடியாமல் கையறுந்த நிலையில் இங்குள்ள அதிமுக அரசு இருப்பதால்தான் மாணவிகளின் மரணம் தொடருகிறது.

ஆனாலும் நீட் தேர்வில் வெற்றி பெறவில்லை என்ற காரணத்தை முன்வைத்து மாணவ மாணவிகள் யாரும் தங்களின் எதிர்காலத்தின் மீது நம்பிக்கை இழக்கத் தேவையில்லை. ஏழை- எளிய மாணவர்கள் மருத்துவராகும் ஏக்கத்திற்கு தற்காலிகமாக நீட் தேர்வு தடை போட்டாலும், இதற்கு ஒரு நிரந்தர தீர்வு கிடைக்கும் நாள் தொலைவில் இல்லை. அதற்காக திராவிட முன்னேற்றக் கழகம் தொடர்ந்து போராடும். ஆகவே மாணவ- மாணவிகள் யாரும் தங்கள் உயிரை மாய்த்துக் கொள்ளும் துயரமான முடிவுகளை தயவு செய்து எடுத்திட வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் எனக்கூறியுள்ளார்.

Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe