Skip to main content

போட்டித் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்கள்; உதவித்தொகை தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

Published on 02/08/2023 | Edited on 02/08/2023

 

Students preparing for competitive exams You can apply for the scholarship exam from today

 

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் போட்டித் தேர்வுப் பிரிவு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை மற்றும் சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினால் கடந்த மார்ச் மாதம் 7 ஆம் தேதி தொடங்கி வைக்கப்பட்டது. போட்டித் தேர்வுப் பிரிவு தமிழக இளைஞர்கள் மத்திய அரசு வேலைவாய்ப்புக்கான போட்டித் தேர்வுகளை எளிதாக அணுகும் வகையில் பல பயிற்சித் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. இதையடுத்து  2023 - 24 ஆம் ஆண்டிற்கான தமிழக அரசின் பட்ஜெட் உரையில், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம், அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரியுடன் இணைந்து, மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குடிமைப் பணிகள் தேர்வுகளுக்காகப் பயின்று வரும் ஆர்வமுள்ள மாணவர்களுக்குச் சிறந்த பயிற்சி மற்றும் இதர தேவையான வசதிகளைச் செய்து உதவும் வகையில் உதவித்தொகை வழங்கும் திட்டத்தைச் செயல்படுத்தும் என்று அறிவிக்கப்பட்டது.

 

இந்நிலையில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் நான் முதல்வன் திட்டத்தின் போட்டித் தேர்வுகள் பிரிவு திட்ட இயக்குநர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “இந்தத் திட்டத்தின் கீழ், ஒவ்வொரு ஆண்டும் மத்திய குடிமைப் பணி தேர்வுக்குப் பயின்று வரும் 1,000 மாணவர்கள் மதிப்பீட்டுத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். முதல்நிலைத் தேர்வுக்குத் தயாராவதற்கு ஒவ்வொரு மாணவருக்கும் 10 மாதங்களுக்கு மாதம் 7 ஆயிரத்து 500 ரூபாய் வழங்கப்படும். இது சமீப காலமாக மத்திய குடிமைப்பணிகள் தேர்வில் தேர்ச்சி பெறும் தமிழக மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வரும் விகிதத்தை மாற்றியமைக்கத் தமிழக அரசால் எடுக்கப்பட்டிருக்கும் மாபெரும் முயற்சியாகும்.

 

இதன்படி தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் கீழ் இயங்கி வரும் நான் முதல்வன் போட்டித் தேர்வுகள் பிரிவின் வாயிலாக மத்திய குடிமைப்பணிகள் தேர்வுக்கான முதல்நிலை தேர்வின் ஊக்கத்தொகைக்கான மதிப்பீட்டுத் தேர்வை வரும் செப்டம்பர் 10 ஆம் தேதியன்று நடத்தத் திட்டமிட்டுள்ளது. இதன்மூலம் தேர்ந்தெடுக்கப்படும் 1000 மாணவர்களுக்கு ஊக்கத்தொகையாக மாதம் 7 ஆயிரத்து 500 ரூபாய் வீதம் 10 மாதங்களுக்கு வழங்கப்படும். ஏற்கனவே அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரியின் கீழ் இயங்கி வரும் அகில இந்தியக் குடிமைப் பணிகள் பயிற்சி மையங்களுக்கான (சென்னை ராஜா அண்ணாமலைபுரம், கோவை பாரதியார் பல்கலைக்கழகம் மற்றும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்) நுழைவுத் தேர்வும் இதில் ஒருங்கிணைக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மதிப்பீட்டுத் தேர்வை எழுதி ஊக்கத்தொகை பெற விரும்பும் மாணவர்கள், https://www.naanmudhalvan.tn.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாக இன்று (02.08.2023) முதல் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கக் கடைசி தேதி 17.08.2023 ஆகும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்