Skip to main content

'மாணவியின் பெற்றோர்கள் ஊடகங்களுக்கு பேட்டி தரக்கூடாது'- உயர்நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமார் உத்தரவு!

Published on 18/07/2022 | Edited on 18/07/2022

 

'Student's parents should not give an interview to the media'- High Court Judge Satish Kumar ordered!

 

பள்ளி மாணவி உயிரிழப்பு சம்பவத்தில் நேற்று நடைபெற்ற கலவரத்தை அடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மாணவியின் தந்தை ராமலிங்கம் தரப்பில் தொடரப்பட்ட வழக்கில் விசாரணை தொடங்கியது.

 

அதில் மாணவர்களின் டி.சி யை எரித்தது யார்? யார் இதற்கான உரிமையை கொடுத்தது என கேள்வி எழுப்பிய நீதிபதி சதீஸ்குமார், இந்த வன்முறை திடீர் கோபத்தால் ஏற்பட்ட வன்முறை போல் தெரியவில்லை, திட்டமிட்டு நடத்தப்பட்டது போல் தெரிகிறது. இந்த வன்முறையின் பின்னணியில் இருப்பது யார்? நீதிமன்றத்தை நாடிவிட்டு ஏன் போராட்டதை கையில் எடுத்தீர்கள் என கேள்வி எழுப்பினார். காவல்துறையினர் யார் கட்டுப்பாட்டிலும் இல்லை. சட்டத்தை முறையாக அமல்படுத்தவில்லை என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தார். அப்பொழுது மனுதாரர் (ராமலிங்கம்) தரப்பில் வன்முறைக்கும் பெற்றோருக்கும் எந்த தொடர்பும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டது.

 

அதனைத் தொடர்ந்து, 'உளவுத்துறை அறிக்கை என்ன சொல்கிறது? இந்த சம்பவத்திற்கு சிலர் மட்டுமே காரணமல்ல. வன்முறை சம்பவத்தை பொறுத்தவரை விசாரணையை நீதிமன்றமே கண்காணிக்கும்' என தெரிவித்து மாணவியின் உடலை வீடியோ பதிவுடன் மறு கூராய்வு செய்ய நீதிமன்றம் செய்ய அனுமதி அளித்தது. மேலும் உடற்கூராய்வின் பொழுது மாணவியின் தந்தை அவரது தரப்பு வழக்கறிஞர் கேசவனுடன் உடனிருக்கவும் அனுமதி வழங்கியது உத்தரவிட்டார். அதேநேரம் வன்முறையாளர்களை கண்டறிந்து பள்ளியில் ஏற்பட்ட இழப்பை அவர்களிடம் இருந்து வசூலிக்க வேண்டும் எனவும் ஆணை பிறப்பித்தார்.

 

மேலும் இந்த வழக்கில்,'தனியார் பள்ளியில் டிராக்டரை வைத்து பேருந்துகளை மோதிய சம்பவமே ஒட்டுமொத்த கலவரத்திற்கு காரணம். மூன்று மருத்துவர்களை கொண்ட குழு மனைவியின் உடலை மறுபிரேதப் பரிசோதனை செய்யும். அக்குழுவில் மருத்துவர்கள் கீதாஞ்சலி (விழுப்புரம்), கோகுலநாதன்( சேலம்), ஜூலியான ஜெயந்தி (திருச்சி), ஓய்வுபெற்ற தடயவியல் துறை நிபுணர் சாந்தகுமாரி  ஆகியோர் இருப்பர். மறுபிரேதப் பரிசோதனைக்குப் பின் வேறு எந்த பிரச்சனையும் செய்யாமல் உடலைப் பெற்றுக்கொள்ள வேண்டும். மாணவியின் பெற்றோர்கள் ஊடகங்களுக்கு பேட்டி தரக்கூடாது. அவர்கள் மீது இரக்கப்படுகிறேன். எதிர்காலத்தில் கல்வி நிலையங்களில் உயிரிழப்பு சம்பவங்கள் நிகழ்ந்தால் சிபிசிஐடி போலீசார் விசாரிக்க வேண்டும். மாணவியின் இறுதிச் சடங்கு அமைதியான முறையில் நடைபெற வேண்டும்' என தெரிவித்து நீதிபதி சதீஷ்குமார்  வழக்கை வரும் 29 ஆம் தேதி ஒத்திவைத்தார்.

 

 

 

சார்ந்த செய்திகள்