புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியம் விக்னேஷ்வரபுரம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் சுமார் 80 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இருப்பினும் பள்ளியில் சுற்றுச் சுவர் இல்லாத நிலை நீடித்து வருகிறது. இந்நிலையில் இன்று (17.07.2025 - வியாழக்கிழமை) மாலை 3.30 மணிக்கு விளையாட்டு மணி அடித்த பிறகு மாணவ, மாணவிகள் பள்ளி வளாகத்தில் விளையாடியுள்ளனர். 

அப்போது, வெளியில் இருந்து பள்ளி வளாகத்திற்குள் சென்ற தெரு நாய் விளையாடிக் கொண்டிருந்த 3 மாணவ, மாணவிகளை அடுத்தடுத்து கடித்துள்ளது.  இதனைக் கண்டு அருகில் இருந்த மாணவ, மாணவிகள் கதறிக்கொண்டு ஓடுவதைப் பார்த்த ஆசிரியர்கள் ஓடிவந்து மாணவர்களைக் கடித்த நாயை விரட்டிவிட்டனர். இதனையடுத்து நாய் கடித்துக் காயமடைந்த மாணவ, மாணவிகள் 3 பேரையும் அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதனால் பெற்றோர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது.

நாய் கடித்து காயங்களுடன் வந்த மாணவ, மாணவிகளுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் கல்வித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் மருத்துவமனைக்கு வந்து விசாரணை செய்துள்ளனர். பல வருடங்களாகச் சுற்றுச்சுவர் இல்லை என்று கோரிக்கை வைத்தும் இன்னும் சுற்றுச்சுவர் கட்டப்படாததால் மதிய உணவு நேரத்தில் கொட்டப்படும் உணவைச் சாப்பிட ஏராளமான நாய்கள் பள்ளி வளாகத்திற்குள் வந்து அச்சுறுத்திக் கொண்டிருந்தது. நாங்கள் பயந்தது போலவே குழந்தைகளை இன்று நாய் கடித்துவிட்டது. இனியாவது சுற்றுச்சுவர் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர் பெற்றோர்கள்.