அரசுப் பள்ளியில் கழிவறையைச் சுத்தம் செய்த மாணவர்கள்; தலைமை ஆசிரியை சஸ்பெண்ட்!

pdu-toilet

புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் ஒன்றியம் நமணசமுத்திரம் குடியிருப்பு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சுமார் 30 மாணவர்கள் வரை படித்து வருகின்றனர். இந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியராக சுமார் 18 ஆண்டுகளாக கலா என்பவர் பணியாற்றி வருகிறார். உதவி ஆசிரியராக தினேஷ் ராஜாவும் பணியில் உள்ளார். இப்பள்ளியில் போதிய கழிவறைகள் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் தண்ணீர் வசதியில்லை. அதனால் துர்நாற்றம் வீசும் காலங்களில் பள்ளி மாணவர்களையே கழிவறையைச் சுத்தம் செய்யப் பயன்படுத்தி உள்ளனர். சமீப காலமாகக் கழிவறை சுத்தம் செய்யத் தினக்கூலிக்கு ஒரு பெண்ணை நியமனம் செய்தும் அவர் வரவில்லை என்பதால் மீண்டும் மாணவர்களே கழிவறைகளை வாளிகளில்  தண்ணீர் தூக்கி வந்து சுத்தம் சுத்தம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் தான் கடந்த 10ஆம் தேதி (வியாழக்கிழமை) காலை 3 மாணவர்கள் வாளியில் தண்ணீர் தூக்கிச் சென்று கழிவறைகளில் ஊற்றி சுத்தம் செய்யும் 8 வினாடிகள் வீடியோ பதிவு வெளியானதும் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் அருணா உத்தரவின் பேரில் கோட்டாட்சியர் ஐஸ்வர்யா மற்றும்  மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சண்முகம் ஆகியோர் கடந்த சில நாட்களுக்கு முன்பு பள்ளியில் நேரில் ஆய்வு செய்துள்ளனர். மேலும், மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் கலாராணி மற்றும் அரிபளம் வட்டாரக் கல்வி அலுவலர் கருணாகரன் உள்ளிட்ட அதிகாரிகளைச் சம்பவம் நடந்த பள்ளியில் நேரில் சென்று ஆய்வு செய்து அறிக்கை தரக் கேட்டிருந்தார்.

அதன்படி கல்வித்துறை அதிகாரிகள் இன்று (14.07.2025 - திங்கள் கிழமை) பள்ளிக்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர். அப்போது தண்ணீர் வசதி இல்லாத கழிவகைளை மாணவர்கள் சுத்தம் செய்தது உண்மை என்பது தெரிய வந்தது. மேலும் மாணவர்கள் கழிவறை சுத்தம் செய்யும் காட்சிகளைத் தனது செல்போனில் வீடியோ பதிவு சமூகவலைத்தளங்களில் பகிர்ந்தது காலை உணவுத்திட்ட சமையலர் என்பதும் தெரிய வந்தது. கல்வித்துறை அதிகாரிகளின் விசாரணை அறிக்கையையடுத்து மாணவர்கள் நலனில் அக்கறைகாட்டாத, அலட்சியமாகச் செயல்பட்டு பள்ளிக்கு உரிய நேரத்தில் வந்து மாணவர்களைக் கண்காணிக்கத் தவறியதுடன் மாணவர்களை வகுப்பறைகளில் அமரவைத்து பாடம் நடத்தத் தூய்மைப் பணியாளரை நியமித்த பள்ளித் தலைமை ஆசிரியை கலா பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். அதே போலச் சரியான நேரத்திற்குப் பள்ளிக்கு வராத உதவி ஆசிரியர் தினேஷ் ராஜா பணியிட மாறுதலுக்குப் பரிந்துரை செய்துள்ளனர். 

மேலும் தூய்மைப் பணியாளராக நியமிக்கப்பட்டவர் ஏன் பணிக்கு வரவில்லை. அதற்காகப் பள்ளி மாணவர்களைப் பயன்படுத்தியது ஏன் என்றும் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும், கழிவறைகள் அமைக்கும் போதே தண்ணீர் குழாய் இணைப்புகளும் கொடுத்திருந்தால் மாணவர்கள் கழிவறையைப் பயன்படுத்தும் போதே தண்ணீரை ஊற்றி சுத்தம் செய்துவிட்டு வருவார்கள். ஆனால் தண்ணீர் இல்லாத கழிவறைகள் என்பதால் இப்படி மாணவர்களைப் பயன்படுத்தி வருகின்றனர். ஆகவே அனைத்துப் பள்ளி கழிவறைகளிலும் தண்ணீர் வசதியை ஏற்படுத்த அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்தால் இது போன்ற சம்பவங்களைத் தவிர்க்கலாம் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள். 

govt school HEAD MASTER pudukkottai suspended Toilet
இதையும் படியுங்கள்
Subscribe