திண்டுக்கல் பாரதிபுரம் சந்தைரோடு பகுதியில் மாநகராட்சி மூலம் அரசு நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் திண்டுக்கல் நகரில் உள்ள மேட்டுப்பட்டி, நாகல்நகர், பாரதிபுரம் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் எட்டாம் வகுப்பு வரை படித்து வருகின்றனர். இப்பள்ளியின் தலைமை ஆசிரியையாக சாந்தினி என்பவர் பணியாற்றி வருகிறார். இப்பள்ளியில் தமிழ்வழி மட்டுமல்லாது ஆங்கில வழிக் கல்வியும் கற்பிப்பதால் இங்கு தங்கள் குழந்தைகளைப் படிக்க வைக்க பெற்றோர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். கடந்த ஆண்டு திண்டுக்கல்லில் அதிகம் சேர்க்கை நடைபெற்ற அரசு பள்ளிகளில் இதுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தான் பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் அதிர்ச்சிக்கு உள்ளாகும் வகையில் ஒரு பெரும் அவலமும் இந்த அரசு பள்ளியில் நடந்துள்ளது. இப்பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகளில் தினமும் இருவரை அங்குள்ள கழிவறைகளை தலைமை ஆசிரியை சாந்தினி தினமும் சுத்தப்படுத்த வேண்டும் என வற்புறுத்தியதாகவும், டீ வாங்கி வருதல் வீட்டுக்கு தேவையான காய்கறி வாங்கி வருதல் உள்ளிட்ட தேவைகளுக்கு மாணவ மாணவிகளை தலைமை ஆசிரியை சாந்தினி பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்து களத்தில் இறங்கிய அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சிலர் மாணவிகள் கழிவறையை சுத்தம் செய்யும் காட்சியை தங்களது செல்போனில் ரகசியமாக புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டனர். இந்த விஷயம் சிறிது நேரத்தில் சமூகவலைதளத்தில் தமிழகம் முழுவதும் பரவியது. கழிவறையை சுத்தம் செய்யும் காட்சியை கண்டு பெற்றோர் மட்டுமல்லாது சமூக ஆர்வலர்கள் பலரும் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இப்படி மாணவிகளை மிகவும் கீழ்த்தரமான முறையில் நடத்திய தலைமை ஆசிரியை சாந்தினி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இதுபோன்ற அவலங்கள் இனிமேலும் தொடரக்கூடாது என்னும் வகையில் கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பெற்றோர்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். இச்சம்பவம் திண்டுக்கல்லில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது