/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/sathunavu-thittam.jpg)
சத்துணவு கிடைக்காமல் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதால், கிராமப்புறங்களில் தொடக்கப் பள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்த அறிவியல்பூர்வ ஆலோசனைகளைப் பெற்று ஆய்வு செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கரோனா ஊரடங்கு காரணமாகப் பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் சத்துணவு மாணவர்களுக்கு சமைக்கப்பட்ட உணவை வழங்க உத்தரவிடக் கோரி சிட்டிசன் கன்ஸ்யூமர் அண்ட் சிவிக் ஆக்ஷன் குரூப் என்ற அமைப்பின் சார்பில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பள்ளிகள் மூடப்பட்டதால் சத்துணவு இல்லாமல் மாணவர்கள் பிச்சை எடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும், சத்துணவுத் திட்டம் மூலம் வழங்கப்படும் ரேஷன் பொருட்களை பெற்றோர், பொருளாதார பாதிப்பு காரணமாக விற்று விடுவதாக வாதிட்டார். மேலும் அவர், அங்கன்வாடி மையங்களை மீண்டும் திறந்து, அவற்றின் மூலம் மாணவர்களுக்குச் சத்துணவு வழங்க நடவடிக்கை எடுக்கலாம் எனவும் யோசனை தெரிவித்தார். இந்த யோசனை குறித்து அரசின் கருத்தை அறிந்து தெரிவிப்பதாக தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் கூறினார்.
இதையடுத்து, தலைமை நீதிபதி அமர்வு, கரோனா தாக்கம் தணிந்துள்ளதாலும், மூன்றாவது அலை தாக்கும் என்பதற்கு அறிவியல்பூர்வமாக எந்த கணிப்பும் இல்லாததாலும், கிராமப்புறங்களில் உள்ள ஆரம்பப் பள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்து அறிவியல்பூர்வமாக ஆலோசனைகளைப் பெற்று ஆய்வு செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. அங்கன்வாடி மையங்களை மீண்டும் திறப்பது குறித்தும் ஆலோசிக்க வேண்டும் என அரசுக்கு அறிவுறுத்திய நீதிபதிகள், மாணவர்களுக்குச் சத்துணவு சென்றடையச் செய்வதற்கான திட்டத்தை வகுக்க வேண்டும் என உத்தரவிட்டு, விசாரணையை ஆகஸ்ட் 4ம் தேதிக்குத் தள்ளிவைத்தனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)