A student who was preparing for the NEET exam jumping in front of a train; Bustle in Cuddalore

Advertisment

நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெறாததால் வாய்ப்பினை இழந்த மாணவி ஒருவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படும் சம்பவம் கடலூரில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் நெய்வேலி டவுன்ஷிப் வட்டம் பகுதியில் வசித்து வருபவர் உத்தராபதி. இவர் என்எல்சியில் ஒப்பந்த தொழிலாளராக உள்ளார். இவரது மகள் நிவேதாவை (பெயர் மாற்றப்பட்டுள்ளது) மருத்துவ படிப்பு படிக்க வைக்க வேண்டும் என விரும்பியுள்ளார் உத்தராபதி. கடந்த ஆண்டு பன்னிரண்டாம் வகுப்பு முடித்த நிவேதா 399 மதிப்பெண்கள் எடுத்த நிலையில் நீட் தேர்வு எழுதியுள்ளார். ஆனால் சரியான மதிப்பெண் கிடைக்காததால் மருத்துவ படிப்பில் அவரால் சேர முடியவில்லை.

இருப்பினும் விடாத பெற்றோர், அவரை எப்படியாவது மருத்துவ படிப்பில் சேர்த்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் தனியார் கோச்சிங் சென்டர் ஒன்றில் பயிற்சிக்காக சேர்த்து விட்டுள்ளனர். இந்திரா நகரில் இயங்கி வந்த ஆகாஷ் பயிற்சி மையத்தில் சேர்ந்து படித்து வந்த நிவேதா வரும் மே மாதம் 7 ஆம் தேதி நடைபெற இருக்கும் நீட் தேர்வை எழுதுவதற்குத்தயாராகி வந்தார். ஆனால் பயிற்சி மையத்தில் நடத்தப்பட்ட மாதிரித்தேர்வுகளில் நிவேதா சரியான மதிப்பெண்கள் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்துள்ளார் நிவேதா.

Advertisment

கடந்த புதன்கிழமை வகுப்பு இல்லாத நிலையில் வகுப்பு உள்ளதாகக் கூறிவிட்டு நெய்வேலியிலிருந்து பேருந்து மூலம் வடலூருக்குச் சென்ற நிவேதா, வடலூர் ரயில் நிலையம் அருகே ரயில் தண்டவாளத்தில் இறங்கி பெங்களூரிலிருந்து கடலூர் நோக்கி வந்து கொண்டிருந்த ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே போலீசார் அவரது உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.