
ஆசிரியர் தினத்தன்று ஆசிரியருக்கு பள்ளி சிறுமி இனிப்பு வழங்கிய பொழுது அவர் கையில் காயம் இருந்ததை பள்ளியே புகாரளித்த சம்பவம் பெரம்பலூரில் நிகழ்ந்துள்ளது.
பெரம்பலூர் அருகே உள்ள கவுள்பாளையம் என்னும் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் நடராஜன் - சரஸ்வதி தம்பதி. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் என இரண்டு குழந்தைகள் உள்ளனர். இருவரும் பள்ளியில் பயின்று வந்தனர். நடராஜன் அடிக்கடி மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்து மனைவியிடம் தகராறு செய்வதோடு குழந்தைகளையும் அடித்து துன்புறுத்தி வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வழக்கம்போல் மதுபோதையில் வந்த நடராஜன், தன்னுடைய குழந்தைகளை அடித்ததோடு கையில் சூடு வைத்துள்ளார். இதனைத் தொடர்ந்து கடந்த செப்டம்பர் 5 ஆம் தேதி ஆசிரியர் தினத்தை முன்னிட்டு பள்ளியில் உள்ள மாணவர்கள் ஆசிரியர்களுக்கு இனிப்புகளை கொடுத்தனர். அப்பொழுது நடராஜனின் மகனும், மகளும் ஆசிரியருக்கு இனிப்பு கொடுத்துள்ளனர். அப்பொழுது சிறுமியி கையிலிருந்த சூட்டு காயத்தை கண்ட ஆசிரியர் இது குறித்து விசாரித்துள்ளார். தந்தையே அடித்து கொடுமை செய்தது தெரிய வர, உடனடியாக பள்ளியின் தலைமை ஆசிரியர் காவல்துறைக்கு புகாரளித்தார். தகவலின் பெயரில் பெரம்பலூர் போலீசார் மாணவர்களை துன்புறுத்திய நடராஜனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.