
கல்லூரிக்குச் செல்லத் தாமதமாவதால் இளைஞர் ஒருவரிடம் லிஃப்ட் கேட்ட கல்லூரி மாணவி, இளைஞரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
கரூர் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் ராசிபுரம் அருகே உள்ள தனியார் கல்லூரியில் எம்.பி.ஏ முதலாம் ஆண்டு பயின்று வந்தார். நேற்று காலை கரூரிலிருந்து ஆண்டகளூர்கேட் பகுதிக்குப் பேருந்தில் வந்த கல்லூரி மாணவி, கல்லூரிக்குத் தாமதமாவதால் அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் ஒருவரிடம் தன்னைக் கல்லூரியில் இறக்கி விடும்படி லிஃப்ட் கேட்டுள்ளார்.
அந்த இளைஞரும் லிஃப்ட் கொடுத்துள்ளார். ஆனால், கல்லூரிக்குச் செல்லும் வழக்கமான பாதையைத் தவிர்த்து அணைப்பாளையம் புறவழிச்சாலை வழியாக சிங்களாந்தபுரம் பகுதிக்கு அந்த இளைஞர் இருசக்கர வாகனத்தை விட்டிருக்கிறார். இதனால் சற்று பதற்றமடைந்த மாணவி இளைஞரிடம் விசாரித்த பொழுது, தன்னுடைய சகோதரி பிரசவ வலியால் துடித்துக் கொண்டிருக்கிறார் எனக் கூறியுள்ளார். ஆனால், சிறிது நேரத்தில் அந்தப் பகுதியில் உள்ள மலைப்பகுதிக்கு மாணவியை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்ற அந்த இளைஞர் மாணவியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியுள்ளார்.
மேலும், மாணவி வைத்திருந்த 140 ரூபாய் மற்றும் செல்போனை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பியுள்ளார். பாதிக்கப்பட்ட மாணவி ராசிபுரம் மகளிர் காவல் நிலையத்தில் உடனடியாக புகார் அளித்த நிலையில் மூன்று மணி நேரத்திற்குள் அந்த இளைஞரைப் போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் நாமக்கல் மாவட்டம் தொப்பம்பட்டியைச் சேர்ந்த மணிகண்டன் என்பது தெரிய வந்தது. மாணவியை வன்கொடுமை செய்த மணிகண்டனை போலீசார் சிறையில் அடைத்தனர். கல்லூரி செல்ல லிஃப்ட் கேட்ட மாணவி இளைஞர் ஒருவரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் ராசிபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.