Skip to main content

மாணவிகளை கிண்டல் செய்த மாணவன்; விசாரித்த ஆசிரியர்கள் சஸ்பென்ட் செய்த அவலம்

Published on 26/09/2022 | Edited on 26/09/2022

 

The student teased the students! suspended teachers who inquired!

 

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி நகரை அடுத்துள்ளது சேவூர் கிராமம். அங்குள்ள மேல்நிலைப் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வருகிறான் ராட்டினமங்கலத்தை சேர்ந்த மாணவன் முரளி. (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இந்நிலையில், அதே கிராமத்தைச் சேர்ந்த பள்ளி மாணவிகள் இருவர் மீது கடந்த செப்டம்பர் 21ஆம் தேதி மாலை இந்த மாணவன் சிகரெட் பிடித்து புகை ஊதியதாக கூறப்படுகிறது. அந்த மாணவிகள் வீட்டுக்கு செல்லாமல் பள்ளிக்கே திரும்ப வந்து வகுப்பு ஆசிரியரிடம் தகவல் சொல்லியுள்ளனர். மறுநாள் செப்டம்பர் 22ஆம் தேதி ஆசிரியர்கள் வெங்கட்ராமன், திலீப்குமார், நித்தியானந்தம், பாண்டியன் ஆகியோர் ஸ்டாஃப் ரூம்க்கு அழைத்து விசாரித்தபோது, ஆசிரியர்களிடம் வாக்குவாதம் செய்துள்ளான். இதனால் கோபமாகி இரண்டு ஆசிரியர்கள் அவனை அடித்ததாகவும், இரண்டு ஆசிரியர்கள் எச்சரித்து, ‘போய் உங்க அப்பாவை அழைச்சிக்கிட்டுவா’ன்னு சொல்லியதாகவும் கூறப்படுகிறது.

 

தனது பெற்றோருடன் ஆரணி அரசு மருத்துவனைக்கு சென்று ஆசிரியர்கள் அடித்துவிட்டார்கள், நெஞ்சுவலி என மருத்துவமனையில் உள்நோயாகியாக அட்மிட்டாகியுள்ளார். இது பற்றி ஆரணி தாலுக்கா காவல்நிலையத்தில் புகார் தந்துள்ளனர். காவல்துறை, கல்வித்துறை அதிகாரிகள் பள்ளியில் வந்து விசாரணை நடத்தியுள்ளனர். மாணவனுக்கு ஆதரவாக குறிப்பிட்ட கட்சி நிர்வாகிகள் வந்துள்ளனர். சாதி பெயரை சொல்லி மாணவனை ஆசிரியர்கள் அடித்துள்ளார்கள், ஆசிரியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கலைன்னா சாலைமறியல் செய்வோம் எனச்சொல்லியதாக கூறப்படுகிறது.

 

ஆசிரியர்கள் மாணவனை அடித்தார்களா என சக மாணவர்களிடம் விசாரித்த கல்வித்துறை அதிகாரிகள் முதல்கட்டமாக, நான்கு ஆசிரியர்களில் இருவரை சஸ்பென்ட் செய்துள்ளனர், இருவரை பணியிடமாற்றம் செய்துள்ளனர். இந்தத் தகவல் ஆரணியை தாண்டி பொதுமக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்திவிட்டது. தவறு செய்த மாணவன் மீது நடவடிக்கை எடுக்கவிடாமல் சாதி பெயரை சொல்லி தடுப்பது சரியா? கேள்வி எழுப்பிய ஆசிரியர்களை சஸ்பென்ட், இடமாறுதல் செய்தது தவறு என்கிற வாதம் எழுந்தது. ஆசிரியர் சங்கங்களும் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தினர்.

 

அக்கிராம மக்களில் சிலர், முதல் லாக்டவுன் முடிந்து 10, 11, 12 ஆம் வகுப்பு பிள்ளைகளுக்கு மட்டும் பள்ளி நடந்தபோது, இரண்டு மாணவர்களுக்குள் அடிதடியாகி இதே மாணவன், மற்றொரு மாணவனை காம்பஸால் குத்தியது பிரச்சனையானது. சக மாணவர்களுக்கு கூல்லிப், சிகரெட், ஹான்ஸ் விற்பனை செய்கிறான் என சகமாணவர்கள் ஆசிரியர்களிடம் புகார் சொல்லியுள்ளார்கள். சில வாரங்களுக்கு முன்பு பள்ளி வாசலில் பிறந்தநாள் கேக் வெட்டி இவனும், இவனது நண்பர்களும் பள்ளிக்கு வந்த சக மாணவ – மாணவிகள் மீது பூசினார்கள். இதுயெல்லாம் மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருந்தார்கள். மாணவனின் சேட்டை குறித்து மாணவனின் தந்தையிடம் இதுவரை நான்கு முறை புகார் சொல்லியும் அவர் கண்டுகொள்ளவில்லை என்கிறார்கள்.

 

இதுகுறித்து மாணவன் தரப்பில் பேசியபோது, நான்கு ஆசிரியர்கள் மாணவனை அழைத்து சாதி பெயரை சொல்லி அடித்துள்ளார்கள். இதே ஆசிரியர்கள் ஒடுக்கப்பட்டசாதியை சேர்ந்த மாணவிகளின் தலையில் கொட்டியுள்ளார்கள். புத்தக பையை சோதனை செய்து மற்ற மாணவர்கள் முன்னால் அசிங்கப்படுத்தியுள்ளார்கள். இதற்கெல்லாம் காரணம், சம்மந்தப்பட்ட மாணவர் ஹேர்ஸ்டைல் டிபரன்டாக இருந்துள்ளது அது குறித்து கேள்வி கேட்ட பள்ளியின் உதவி தலைமையாசிரியரை எதிர்த்து பேசியுள்ளான். அதற்காக அவனை அடித்துள்ளார். என்மகனை எப்படி அடிக்கலாம், ஏதாவது தவறு செய்தால் என்னிடம்தானே சொல்லனும் என அவனது அப்பா கேட்டுள்ளார். இதில் முன்விரோதம் வைத்துக்கொண்டு நான்கு ஆசிரியர்களை ஏவியுள்ளார். அந்த ஆசிரியர்களும் சாதி ரீதியாக பேசி, அவமானப்படுத்தியுள்ளார்கள். கல்வித்துறை அதிகாரிகள் விசாரித்தே நடவடிக்கை எடுத்தார்கள். இப்போது அந்த சிறுவன் மீது பொய்யான புகார்களை மற்ற சாதியினர் பரப்புகிறார்கள். அவன் கொஞ்சம் சேட்டை செய்பவன்தான், அதற்காக அவனை பெரிய குற்றவாளிபோல் சித்தரிக்கிறார்கள் என்றார்.

 

இது குறித்து நம்மிடம் பேசிய ஆசிரியர் சங்க நிர்வாகிகள் சிலர், பள்ளிக்கு ஒழுங்காக வராமல், தவறான பழக்கவழக்கங்களை கற்றுக்கொண்டு வந்து சக மாணவர்களை சீரழிக்கும்போது அதனை ஆசிரியர்கள் கேள்வி எழுப்பக்கூடாதா?, என்பிள்ளையை எப்படி அடிக்கலாம்னு கேள்வி கேட்கும் பெற்றோர், ஏன்டா தப்பு செய்யறன்னு பிள்ளையை கேட்கறதில்லை. இந்த விவகாரத்திலும் புகார் சொன்ன அந்த மாணவியை வரச்சொல்லுன்னு கேட்கறாங்க. கேள்வி கேட்ட ஆசிரியர்கள் மீதே சாதியை பற்றி பேசினார்கள் என புகார்தரும் பெற்றோர்கள் அந்த மாணவிகள் மீது என்னன்ன குற்றம்சாட்டுவாங்க. எதுக்கு தனி ரூம்ல வச்சி விசாரிக்கனம்னு கேட்கறாங்க, எல்லா பிள்ளைகள் முன்னாடியும் வச்சி விசாரிச்சா அதையும் தப்புன்னு சொல்லுவாங்க, நாங்க என்னங்க செய்யறது என கேள்வி எழுப்பினார்கள்.

 

கல்வித்துறை அதிகாரிகளோ, பள்ளியில் மாணவர்களை அடிக்ககூடாது என்கிற சட்டம் உள்ளது. ஆசிரியர்கள் மாணவர்களை அடித்தாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அதனால் நடவடிக்கை எடுத்தோம் என்கிறார்கள்.

 

இந்நிலையில் செப்டம்பர் 26ஆம் தேதி அப்பள்ளி மாணவ – மாணவிகள் நூற்றுக்கும் அதிகமானவர்கள் மற்றும் பெற்றோர்கள் சிலர், ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுத்தது போல், தவறு செய்த மாணவன் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கேட்டு ஆரணி டூ வேலூர் சாலையில் சேவூரில் சாலைமறியல் செய்தனர். காவல்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் வந்து சமாதானம் செய்து விசாரிக்கிறோம் எனச்சொல்லி மறியலை கைவிட செய்தனர்.

 

இது ஆரணி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

'ஒற்றுமையே இல்லாத இந்தியா கூட்டணி எப்படி ஆட்சி நடத்தும்?' - எடப்பாடி பழனிசாமி பேச்சு

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
'How can India alliance govern without unity?'-Edappadi Palaniswami's speech

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

இந்நிலையில், ஆரணியில் அதிமுக வேட்பாளர் ஜி.வி கஜேந்திரனை ஆதரித்து அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பரப்புரை செய்தார். கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், ''ரத்தத்தை வியர்வையாக சிந்தி உழைத்து மக்களுக்கு உணவளிப்பவர்கள் விவசாயிகள், விவசாயத் தொழிலாளிகள். விவசாயி எனச் சொல்வதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். விவசாயிதான் எதற்கும் பயப்படமாட்டான். விவசாயம் என்பது ஒரு புனிதமான தொழில். அந்தப் புனிதமான தொழிலை ஸ்டாலின் கொச்சைப்படுத்தியுள்ளார். என்னைப் பற்றி பேசுவதாக நினைத்துக் கொண்டு விவசாயிகளை அவமானப்படுத்தாதீர்கள். அதிமுக ஆட்சியில் விவசாயிகள் செழிப்போடு, நலமோடு இருந்தார்கள். இரண்டு முறை தொடக்க வேளாண்மை வங்கியில் பயிர்க்கடன் பெற்று இருந்தார்கள். அவற்றைத் தள்ளுபடி செய்தோம்.

2016 ஆம் ஆண்டு ஜெயலலிதா தள்ளுபடி செய்தார். 2021 இல் நான் முதல்வராக இருந்த பொழுது தள்ளுபடி செய்தேன். 2017 ஆம் ஆண்டு நான் முதல்வராக பதவியேற்ற போது கடுமையான வறட்சி. குடிப்பதற்குக் கூட தண்ணீர் இல்லை. அப்படிப்பட்ட காலத்தில் கூட மக்களுக்கு தங்கு தடை இல்லாமல் குடிநீரை வழங்கினோம். நீங்கள் ஏதாவது ஒரு திட்டத்தை நிறைவேற்றி தேசிய அளவில் விருதுகள் பெற்றுள்ளீர்களா? ஆனால் திறமையான அரசாங்கம் என்பதற்கு ஆதாரமாக தேசிய அளவில் பல விருதுகளை நாங்கள் பெற்றுள்ளோம். போக்குவரத்து துறையில் சிறப்பாக செயல்பட்டு விருதுகள் பெற்றோம். மின்சாரத் துறையில் சிறப்பாக செயல்பட்டு தேசிய அளவில் விருது பெற்றோம். உள்ளாட்சியில் சிறந்த நிர்வாகம் மிக்க அரசு என 140 தேசிய விருதுகளைப் பெற்ற ஒரே அரசாங்கம் அதிமுக அரசு.

சமூக நலத்துறையில் விருது, உயர்கல்வியில் விருது, பொதுத்துறையில் விருதுகள். இப்படி துறையாக சிறப்பான நிர்வாகத்தின் காரணமாக தேசிய அளவில் பல விருதுகளைப் பெற்று சாதனையை நிலைநாட்டிய அரசு அதிமுக அரசு. இந்தியா கூட்டணியில் ஒற்றுமை இல்லை. இன்னும் பிரதமர் வேட்பாளர் அறிவிக்கவில்லை. முதல்வர் ஸ்டாலின் அறிவித்த வாக்குறுதிகளில் 10 சதவீதம் கூட இன்னும் நிறைவேற்றப்படவில்லை. பெட்ரோல், டீசல் விலையை குறைப்பதாக அளித்த வாக்குறுதியையும் திமுக நிறைவேற்றவில்லை. அதிமுக கொண்டு வந்த பல நலத்திட்டங்களை ரத்து செய்ததே திமுகவின் ஒரே சாதனை. எம்ஜிஆர், ஜெயலலிதா ஆசீர்வாதம் உள்ளவரை அதிமுகவை எவராலும் ஒன்றும் செய்ய முடியாது. அனைத்து தடைகளையும் உடைத்து மக்களவைத் தேர்தலில் அதிமுக வெற்றி பெறும்'' என்றார்.

Next Story

இடி தாக்கியதால் ஒரே நேரத்தில் பறிபோன 16 உயிர்கள்; ஆரணியில் சோகம்

Published on 09/11/2023 | Edited on 09/11/2023

 

16 lives were lost simultaneously in the lightning strike

 

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த தச்சூர் அடுத்த சதுப்பேரிபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி மார்க்கண்டேயன். வயதான இவருக்கு இவர் வளர்க்கும் ஆடுகள் தான் வாழ்வாதாரமே. ஆடுகளை குழந்தைகளைப் போல் வளர்த்து வந்தார். காலையில் ஆடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டி வருவார். மாலையில் அவர், குரல் கொடுத்ததும் காடு, மேடுகளில் மேய்ந்துகொண்டிருக்கும் ஆடுகள் இவரிடம் ஓடிவந்து நிற்கும். வீட்டுக்கு ஓட்டி வந்து பட்டியில் அடைப்பார்.

 

நவம்பர் 8 ஆம் தேதி காலை முதலே தமிழ்நாடு முழுவதும் விட்டுவிட்டு மழை பெய்துகொண்டு இருந்தது. மதியம் முதல் ஆரணி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதியில் பரவலாக மழை பெய்தது. தச்சூர் அருகே உள்ள வரதகாண்டம் பகுதியில் தனது 15 ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார் மார்க்கண்டேயன். மழையில் நனையாமல் இருக்க அங்குள்ள பம்பு செட் ஓரம் ஒதுங்கியுள்ளார். மழை கொஞ்சம் அதிகமாகப் பெய்ததும் தனது ஆடுகள் மழையில் நனைவதைப் பார்த்து கவலையானவர் ஆடுகளுக்கு குரல் கொடுத்ததும் அவர் இருந்த இடத்துக்கு ஓடிவந்து மழையில் நனையாமல் அவர் அருகே நின்றது. சிறிய இடத்தில் 20 ஆடுகள் நின்றுள்ளது.

 

அப்போது அந்தப் பகுதியில் கனமழையுடன் திடீரென இடி இடித்து மின்னல் வெட்டியுள்ளது. மின்னலின் ஒரு பகுதி விவசாய நிலத்தில் பம்பு செட் அறையின் வெளியே மழைக்காக நின்று கொண்டிருந்த மார்க்கண்டேயன் மற்றும் அவரது ஆடுகள் மீது பாய்ந்தது. இதனால் சம்பவ இடத்திலேயே மார்க்கண்டேயன் மற்றும் சுமார் 15 ஆடுகளுடன் சம்பவ இடத்திலேயே பலியானார்.

 

மழை விட்டதும் அப்பக்கம் சென்றவர்கள் ஆடுகளும், மார்க்கண்டேயனும் இறந்து கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சியாகினர். இதுகுறித்து அதிகாரிகளுக்குத் தகவல் அனுப்பினர். வருவாய்த்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். களம்பூர் காவல் நிலைய போலீசார் விவசாயி சடலத்தை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்கு ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர். இடி தாக்கி இறந்த 15 ஆடுகளைக் குழி தோண்டிப் புதைத்துள்ளனர். தனது பிள்ளைகள் போல் வளர்த்த ஆடுகளுடன் விவசாயி மரணத்தை தழுவியுள்ளதை சொல்லிச்சொல்லி அழுதுகொண்டு இருக்கிறார்கள் அவர்களது உறவினர்கள்.