
கோவை கோட்டைமேடு பகுதியை சேர்ந்த 17 வயது மாணவி ஒருவர் ஆர்.எஸ் புரத்தில் உள்ள தனியார் பள்ளியில் +2 படித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு தனது வீட்டில் உள்ள அறை ஒன்றில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். அந்த அறையில் அவர் எழுதிய கடிதம் ஒன்றும் சிக்கியது. அதில், பள்ளி ஆசிரியர் ஒருவர் உட்பட மூன்று பேரை குறிப்பிட்டு, தனக்கு இவர்கள் பாலியல் தொல்லை கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்தை அறிந்து வீட்டிற்கு வந்த காவல்துறையினர் மாணவியின் உடலைக் கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இதுதொடர்பாக விசாரணை நடத்திய காவல்துறையினர் சம்பந்தப்பட்ட இயற்பியல் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி மீது தற்கொலைக்கு தூண்டுதல் மற்றும் போக்சோ உள்ளிட்ட பிரிவுகளில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வந்தனர். இந்நிலையில் தலைமறைவாக இருந்த அவரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். அவர் விரைவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.