student responds Velmurugan harshly criticized Vijay

நடிகரும், தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவருமான விஜய் கடந்த மூன்று ஆண்டுகளாகவே தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் தொகுதி வாரியாக மூன்று முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களை நேரில் அழைத்து கல்வி விருது வழங்கி வருகிறார். சமீபத்தில் மாமல்லபுரத்தில் முதற்கட்டம், இரண்டாம் கட்டம் என இரண்டு கட்டங்களாக நடிகர் விஜய் அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவ மாணவிகளை நேரில் அழைத்துப் பாராட்டி கல்வி விருது வழங்கியிருந்தார்.

நடிகர் விஜய் மாணவிகளுக்கு கல்வி விருது வழங்குவதை விமர்சிக்கும் வகையிலும், அந்த விழாவில் கலந்து கொண்ட மாணவர்கள் மற்றும் அவர்களுடைய பெற்றோர்களை விமர்சிக்கும் வகையிலும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வேல்முருகன் பொதுக்கூட்டம் நிகழ்வு ஒன்றில் விமர்சித்துப் பேசி இருந்தது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. வேல்முருகனின் பேச்சுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் எதிர்ப்பு தெரிவித்ததோடு அவரை கண்டித்தும் வந்தனர்.

Advertisment

இந்த நிலையில், விஜய்யிடம் கல்வி நிதியுதவி பெற்ற மாணவி ஒருவர், வேல்முருகனனின் விமர்சனத்திற்கு பதில் அளித்துள்ளார். மூன்றாம் கட்டமாக 10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கான நிதியுதவி வழங்கும் விழா தமிழக வெற்றிக் கழகம் சார்பில் இன்று (13/06/2025) மாமல்லபுரத்தில் நடைபெற்று வருகிறது. இந்த விழாவிற்கு வந்த தமிழக வெற்றிக் கழகம் கட்சித் தலைவர் விஜய், மாணவர்களுக்கு நிதியுதவியை வழங்கி வருகிறார்.

இதில் விஜய்யிடம் கல்வி நிதியுதவி பெற்ற மாணவி ஒருவர் பேசியபோது, ‘சில வீடியோக்களை எல்லாம் பார்த்தேன். அதில், தோள் மேல் விஜய் கை போடுகிறார் என்று சொல்கிறார்கள். ஆனால், நாங்கள் அவரை எங்கள் அப்பாவாக, எங்கள் அண்ணனாக, எங்கள் உயிராகப் பார்க்கிறோம். அவர்களுடைய குடும்பத்தில் இருப்பவர்களை இப்படியெல்லாம் சொல்வார்களா? அப்படி சொல்லாதீங்க, அப்படி சொல்லக் கூடாது . விஜய்க்காக நாங்கள் இருக்கிறோம்’ எனப் பேசினார்.